India
“இந்தியா பாதுகாப்பு இல்ல.. நாங்க போறோம்”- மும்பையில் RPF வீரரால் சுட்டு கொல்லப்பட்டவரின் குடும்பம் பகீர்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு, ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயில் ( ரயில் எண் : 12956) சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் இரயில் பால்கர் என்ற இரயில் நிலையம் அருகே வந்தபோது அந்த இரயிலில் இருந்த RPF என்று சொல்லப்படும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் என்பவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சக RPF வீரர் ஒருவர் உட்பட 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்ட சக பயணிகள் அலறவே தஹிசார் நிலையம் அருகே இரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளார் அந்த RPF வீரர். இந்த நிகழ்வு குறித்து பயணிகள் சக அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே தப்பிக்க முயன்ற வீரரை கையும் களவுமாக அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், சேத்தன் சிங் வேண்டுமென்றே பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியானது. அதாவது குறிப்பிட்டு சொல்லப்படும் பெட்டி ஒன்றில் பயணித்த அக்தர் அப்பாஸ் அலி (48), காதர் பன்புர்வாலா (58), சையது சைபுத்தீன் (43) ஆகிய இஸ்லாமிய பயணிகள் மீது அவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
மேலும் துப்பாக்கியால் சுட்ட பின்னர், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்தவர்களை தான் கொன்றதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த நிகழ்வு குறித்து பேசிய உயரதிகாரிகள், RPF வீரரான சேத்தன் சிங், சம்பவம் நடந்த அன்று உயர் அதிகாரிகளுடன் சண்டை என்றும், அதனால் அவர் மன அளவில் பாதிக்கப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
எனினும் இந்த விவகாரம் குறிப்பிட்ட சமூக மக்களை நோக்கி தாக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பம் தங்களுக்கு இந்தியா பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் வெளியே பத்திரிகையாளர்களை சந்த்தித் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த காதர் என்பவரின் மகன் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "எனக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. மீடியா, உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள் துப்பாக்கியால் சுட்ட நபர், அவரது உயரதிகாரிகளுடன் ஏற்பட்ட சண்டையால் தான் இது நிகழ்ந்ததாக. ஆனால் எனது தந்தை உட்பட இஸ்லாமியர்கள் இருக்கும் பெட்டிக்கு அவர் எதற்கு சென்றார் என்று போலீசார் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஒருவேளை அவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா இருந்தால், தாடி வைத்த பயணிகளை மட்டும் குறிப்பிட்டு சுட வேண்டும்?
எனது குடும்பத்தினர் இனி இந்தியாவில் வாழ்வதை பாதுகாப்பாக உணரவில்லை. இந்த கொலைகள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையிலும் எங்களுக்கு திருப்தி இல்லை. இந்த கொலைகளுக்கான நோக்கத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மகாராஷ்டிரா மாநில அரசும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
நாங்கள் துபாயில் பணிபுரிந்து வருகிறோம். இனி எனது குடும்பத்தையும் அங்கேயே கூட்டி செல்ல போகிறேன். இதற்கு பிறகு இந்தியா வரும் எண்ணமே எங்களுக்கு இல்லை. பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்கள் எங்களை சந்தித்து ஆறுதலும், உதவிகளும் செய்தனர். ஆனால் சிவசேனா கட்சியினர் யாரும் வந்து பார்க்க கூட இல்லை." என்று வேதனையுடன் தெரிவித்தார்.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!