India
“வாய்க் கூசாமல்.. மெகா அண்டப்புளுகு” : மதுரை எய்மஸ் குறித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதிலடி!
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 9 வயது மாணவி மீது சாலையில் திரிந்த மாடு ஒன்று முட்டியது. இதனால் காயமடைந்த அந்த சிறுமியை, அவரது பெற்றோர் அமைந்தகரையில் பில்ராத் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மாணவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவர்கள் உடனடியாக வழங்கி தொடர்ந்து கவனித்து வருகின்றனர். தலை, கை ஆகிய இடங்களில் அடிபட்டு உள்ளதை, சி.டி ஸ்கேன் எடுத்து பெரிய பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கண் அருகே இரத்தக் கசிவு இருப்பதை கண்டரிந்து உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்" என்றார்.
பின்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஒன்றிய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் குறித்து சொன்ன பதில், உண்மைக்கு மாறான பதில். ஒன்றிய நிதி அமைச்சராக இருப்பவர் இப்படி மக்களை குழப்பும் வகையில் பேசக்கூடாது.
வாய்க் கூசாமல் பேசி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது மெகா அண்டப்புளுகு என்று சொல்வார்களே, அப்படியான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2015ஆம் ஆண்டு 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என அறிவித்தது. அதில் உத்தரப்பிரதேசம், அசாம், ஜம்மு, பீகார், காஷ்மீர், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது.
ஆனால் உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. அசாம், ஜம்முவில் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்கி வருகின்றன. பீகார் உள்ளிட்ட இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரை நிலைமை நமக்கே தெரியும். 2017ல் ஜார்க்கண்டில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை, தெலங்கானாவில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் இயங்கி வருகின்றன.
2022ல் மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிவித்த மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 2019ல் பிரதமர் மோடியால் அடிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் இன்று சொல்கிறார். ஆனால் 4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜீதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அடிக்கல் காட்டப்பட்ட இடம் என்பது ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய இடமே அல்ல. அது அந்த மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்த இடம். அதனை ஒன்றிய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி உள்ளார். அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், ஒன்றிய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. அது 2021ல் தி.மு.க அரசு அமைவதற்கு முன்பே நடந்தது.
இப்படி தவறான தகவலை ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது என்பது மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒன்றிய அரசே முழு நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மட்டும் ஜப்பான் நிதியை நாடிச் செல்வது ஏன்?
மற்ற மாநிலங்களை விட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளதாகவும், நிதி தேவை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் ஒன்றிய நிதி அமைச்சர் கூறி உள்ளார். அதையெல்லாம் கூட காலதாமதம் ஆனதற்கு காரணமாக சொல்லி உள்ளார்.
ஆனால் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஆயிரம் படுக்கைகளுடன் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடித்து உள்ளோம். இன்று அது செயல்பாட்டிற்கே வந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான நிலத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் ஒன்றிய அரசுக்கு மாற்றியதற்கான கோப்புகளை அடிக்கல் நாட்டு விழா நடந்த பின்னர், கடந்த 2020, நவம்பர் 3 அன்று டெல்லிக்கு சென்று ஒன்றிய அரசின் உரிய அலுவலர்களிடம் அன்றைய அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் தெரியாமல் நிதி அமைச்சர் இவ்வாறு பேசி உள்ளார்.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை எய்ம்சில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் இயங்கி வருகின்றன. அதனையே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தி.மு.க அரசு அமைந்த பின்னர் தான், வலியுறுத்தி கேட்டு பெற்றோம்.
மருத்துவக் கல்லூரிக்கு மாணவச் சேர்க்கையை ஆரம்பித்தாலாவது மருத்துவமனையை விரைவில் கட்டி முடிப்பார்கள் என நினைத்தோம். ஆனால் வகுப்புகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமான பணிகளை கூட தொடங்கவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில், நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான செலவுகள் தமிழ்நாடு அரசால் தான் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!