India

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. பாதுகாப்பு படை முகாமில் இருந்து 19 ஆயிரம் துப்பாக்கி குண்டுகள் கொள்ளை!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்திற்கே பிரதமர் மோடி வருகை தராமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளது.

இதற்கு மெய்த்தி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று இம்பால் மேற்கில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, மணிப்பூர் ரைபில் படை முகாமிலிருந்து மர்ம கும்பல் ஒன்று 19,000 துப்பாக்கி குண்டுகள் மற்றும் 195 துப்பாக்கிகள், 25 நவீன ரக துப்பாக்கிகள், 25 புல்லட் புரூப் உடைகள், 124 கைகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறையின் போது பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாவதற்கு முன்பே அதை அழிக்கும் முயற்சி நடந்துள்ளது என்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை செல்போனில் பதிவு செய்த ஜிபான் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது ஜிபான் என்பவர் வீடியோ எடுத்துள்ளது ஒரு கும்பலுக்கு முன்பே தெரிந்துள்ளது. இதனால் அவர்கள் இவரது கிராமத்திற்குச் சென்று ஜிபானின் செல்போனில் இருந்த வீடியோ தேடிப்பிடித்து அழித்துள்ளனர். இருப்பினும் அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி மணிப்பூரின் கொடூரத்தை நாட்டுக்கே வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

Also Read: ”அமைதியா இருங்க இல்லனா உங்கள் வீட்டில் ரெய்டு நடக்கும்".. மக்களவையில் எதிர்க்கட்சிகளை மிரட்டிய அமைச்சர்!