India

மணிப்பூர் விவகாரம் : தலைமை நீதிபதி குறித்து அவதூறு.. பத்ரி சேஷாத்ரி 3 பிரிவுகளில் அதிரடி கைது - பின்னணி ?

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.

இதனால் எல்லை மீறிய மெய்தெய் சமூகத்தினர், குக்கி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நாடு முழுவதுமுள்ள எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்துள்ளனர். மேலும் INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து பொதுமக்களும் கண்டனம் தெரிவித்ததோடு உச்சநீதிமன்றமும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றமே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர் பத்ரி சேஷாத்ரி. கும்பகோணத்தை சேர்ந்த இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் இவர் youtube உள்ளிட்ட தனியார் சேனலுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும் என்றும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் என்ன செய்ய முடியும் என்றும், வேண்டுமானால் அவரிடம் துப்பாக்கியை கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பலாம் என்றும் பேசி இருந்தார்.

மேலும் வன்முறையை தூண்டும் வகையிலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்து அவதூறாக பேசியதாகவும் இவர் மீது வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் இவர் மீது IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, இவரை சென்னையில் கைது செய்தது.

Also Read: ”மணிப்பூர் மக்களோடு நாங்கள்”.. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கப் புறப்பட்டது 'இந்தியா' கூட்டணி!