India

முன் விரோதம்.. 73 பேர் சாட்சி.. பக்கத்து வீட்டு சிறுமி பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அனச்சல் அருகே அமக்கண்டம் என்ற பகுதி உள்ளது. இங்கு சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். 44 வயதுடைய இவருக்கும், இவரது பக்கத்து வீட்டு குடும்பத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இது பெரிய பிரச்னையாக மாறவே, சுனில் குமார் அந்த குடும்பத்தை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ஆத்திரத்தில் இருந்த சுனில் குமார், பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுவன் மற்றும் பாட்டியை தான் கொண்டு வந்த சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்த அடுத்த அறைக்கு சென்ற சுனில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த சிறுவனின் அம்மாவை சுத்தியலால் தாக்கினார். இதில் அவர் மயக்க நிலைக்கு சென்ற நிலையில், அருகில் இருந்த சிறுவனின் அக்காவான 14 வயது சிறுமியை அருகில் இருக்கும் கொட்டகைக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து தப்பித்து அக்கம்பக்கத்தினர், உறவினர்களிடம் நடந்தவற்றை கூறவே, அவர்கள் சுனிலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இடுக்கியின் வெள்ளத்தூவல் போலீசார் 93 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததோடு, 73 பேர் சாட்சிகளாகவும் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 20-ம் தேதி குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட ஒவ்வொரு குற்றத்துக்கும் சேர்த்து ரூ.9.91 லட்சம் அபராதமும், 4 குற்றங்களுக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனையையும் விதித்துள்ளது.

மேலும் அபராதத் தொகையை கட்ட தவறினால், மேலும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதோடு, சிறுவனை கொன்ற குற்றத்துக்காக குற்றாவளி சுனிலுக்கு மரண தண்டனையும் நீதிமன்றம் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டு நபர்களை கொன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் செயல் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.