India

“போலிஸார்தான் பிடித்துக் கொடுத்தனர்” : மணிப்பூர் பெண்கள் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்!

மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், குகி பழங்குடியினப் பெண்கள் இருவரை சிலர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வீடியோ, இணையத்தில் வைரலானது.

கடந்த 2022-இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக-வே வெற்றி பெற்றது. பைரேன் சிங் முதல்வராக இருக்கிறார். முன்னதாக, 2022 தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, அங்கு 53 சதவிகிதமாக உள்ள ‘மெய்டெய்’ சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அப்போதே, குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பழங்குடி அந்தஸ்து விவகாரம், கடந்த மே மாதம், மெய்டெய் - குக்கி ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையிலான ஆயுத மேந்திய மோதலாக உருவெடுத்தது. இந்த வன்முறை, மே 03ம் தேதி துவங்கிய நிலையில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக, தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த மே 04 ம் தேதி இம்பாலுக்கு அருகே உள்ள காங்போக்பி என்ற மாவட்டத்தில் குகி பழங்குடியினப் பெண்கள் இருவரை சிலர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வீடியோ, இணையத்தில் வைரலானது.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் வகுப்புவாதக் கலவரத்திற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்துவது அரசியலமைப்பு துஷ்பிரயோகம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்களை வன்முறைக் கருவிகளாக்கி, மனித உரிமைகளை மீறி அதன்காட்சிகளை ஊடகங்களில் வெளியிடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பதிலளிக்க வலியுறுத்தி, வழக்கை நாளை விசாரிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதனிடையே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பகீர் தகவலை தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் Indian Expressக்கு அளித்த பேட்டியில், “எங்கள் கிராமத்தைத் தாக்கும் கும்பலுடன் போலிஸாரும் உடனிருந்தனர்.

வீட்டுக்கு அருகிலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டுபோய், கிராமத்திலிருந்து சிறிது தூரத்திற்கு அழைத்துச் சென்று, கும்பலுடன் எங்களை சாலையில் விட்டுச் சென்றது போலீஸ். நாங்கள் போலிஸாரால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூர் : “பிரதமர் சாதாரணமாக பேட்டியளிப்பதா?” - பதிலளிக்க முடியாமல் நாடாளுமன்றத்தை முடக்கிய மோடி அரசு !