India

பெண்கள் நிர்வாண ஊர்வலம்.. இதுபோன்று 100 சம்பவங்கள் நடந்துள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் அதிர்ச்சி பேட்டி!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஒன்றிய அரசு மணிப்பூர் வன்முறையைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இதனால் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தை விட்டு அண்டை மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்படி மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இச்சம்பவம் மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நடந்த போது அங்கு மணிப்பூர் போலிஸாரும் இருந்துள்ளதுதான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவம் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பேட்டிக் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியா டுடேக்கு தொலைப்பேசியில் போட்டி கொடுத்த முதலமைச்சர் பிரேன் சிங், "இந்த சம்பவத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் நடந்துள்ளன. இதனால் தான் நாங்கள் மாநிலத்தில் இணையத்தை தடை செய்துள்ளோம்.

ஒரு வழக்கு மட்டுமே தற்போது வெளிவந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மனிதக் குலத்திற்கு எதிரான குற்றம். இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். மற்ற அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்." என தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூர் விவகாரம்: அதிகாரத்தை வைத்துக்கொண்டு மௌனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி - திருச்சி சிவா MP ஆவேசம்!