India

சைரன் ஒலித்தபடி வந்த ஆம்புலன்ஸ்.. பதறியடித்து வழிவிட்ட பொதுமக்கள்: இறுதியில் நடந்த ட்விஸ்டால் அதிர்ச்சி!

பொதுவாக ஆம்புலன்ஸ் சைரன் ஒலியுடன் வந்தால் பொதுமக்கள் வழிவிடுவார்கள். உள்ளே இருக்கும் நோயாளிக்கு எதுவும் ஆக கூடாது என்று மக்கள் பதற்றப்பட்டு வழிவிடுவது வழக்கம். ட்ராபிக் சிக்னல் இருந்தால் கூட அதுவும் ஆம்புலன்சுக்கு தளர்வுகள் உண்டு. உள்ளே நோயாளி இருக்கிறாரோ அல்லது அவர்களை ஏற்ற செல்லும் வாகனமோ சைரன் அடித்துக்கொண்டு தான் போக வேண்டும்.

அப்போது தான் அது அவசரம் என்று பொதுமக்களுக்கு புரிந்து வழிவிட்டு நிற்பர். ஆனால் இங்கே ஒரு ஆம்புலன்ஸ், அவரசமாக செல்வது போல் சைரன் ஒலித்துக்கொண்டே வந்து அந்த ஓட்டுநர் டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனே வழிவிட்டனர். ட்ராபிக் இருப்பதை பொருட்படுத்தாமல் ட்ராபிக் போலீசும் உடனடியாக வாகனங்களை விலக்கி வழிவிட்டார்.

ஆனால் அந்த ஆம்புலன்ஸோ சற்று தொலைவில் பேக்கரி - டீ கடை அருகே நின்றது. இதனை கண்ட அந்த டிராபிக் போலீஸ் உடனடியாக அங்கு சென்று ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் போய் கேள்வி கேட்டார். அப்போது அந்த ஓட்டுநரோ தனக்கு பசி ஏற்பட்டதாகவும், மயக்கம் வருவது போல் இருந்ததால் நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அதற்காக ஏன் வாகனத்தில் சைரனை உபயோகித்தீர்கள் என்று ட்ராபிக் போலீஸ் கேட்டபோது, அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த வீடியோவை அம்மாநில டிஜிபி அஞ்சனி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் தனது சேவையை அறிந்து செய்லபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பஜ்ஜி சாப்பிட ஆம்புலன்சை சைரனுடன் ஓட்டி சென்ற ஓட்டுநர்களின் செயல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தொடரும் அட்டூழியம்.. 20 நாளில் ரூ.30 லட்சம்.. தக்காளி விற்று லாபம் பார்த்த விவசாயிக்கு நேர்ந்த கொடூரம் !