India

6 ஆடுகளை கொன்றதால் ஆத்திரம்.. பழிவாங்க வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிந்த குடும்பம்!

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தைக் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இதுவரை 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்தே சர்ச்சையைச் சிக்கி வருகிறது. குறிப்பாகக் கால்நடைகள் மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதமடைந்தது அதன் உறுதித் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மேலும் அதிக கட்டணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கட்டணத்தை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியா ரயில் நிலையத்திலிருந்து சோஹாவல் என்ற ரயில் நிலையம் அருகே வந்த வந்தே பாரத் ரயில் மீது மூன்று பேர் கல்லெறிந்தனர். இதனால் 4 பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் ரயில்மீது கல்லெறிந்த பஸ்வான் அவரது மகன்கள் அஜய், விஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை 9ம் தேதி வந்தே பாரத் ரயில் மோதி தங்கள் வளர்த்து வந்த ஆறு ஆடுகள் உயிரிழந்தன. இதற்குப் பழி வாங்கவே குடும்பத்துடன் சேர்ந்து ரயில் மீது கல்லெறிந்ததாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: “ரூ.33 லட்சம் கொடுத்தா தான் என் பொண்ணை கொடுப்பேன்” - வரதட்சணை கேட்ட மாமியார் மீது மணமகன் புகார்: நடந்தது?