India

அரசு பணியில் சேர பெண்களுக்கு மார்பளவு நிர்ணயம்.. பாஜக அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி.. முழு விவரம் என்ன ?

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மிகவும் பிற்போக்கான செயல்முறைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் அவதூறு பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டுவரும் நிலையில், பழங்குடி மற்றும் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கையிலும் பாஜக மும்முரமாக இருக்கிறது.

அந்த வகையில், பெண்களுக்கு எதிரான பல்வேறு செயல்முறைகளில் பாஜக இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது பாஜக ஆளும் ஹரியானாவில் வனத்துறை வேலைவாய்ப்புகளில் உடல் தகுதி அளவுகோளாக பெண்களில் மார்பளவு கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா பணியாளர் தேர்வு ஆணையம் சரகர், துணை சரகர் மற்றும் வனவர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், உடல் தகுதி தேர்வில் பெண் தேர்வர்களின் மார்பளவு வேண்டும் என்ற விதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் மார்பகங்கள் விரியாத நிலையில் 74 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 79 செ.மீ. அளவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஆண்களுக்கும் மார்பளவு விரியாத நிலையில் 79 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 84 செ.மீ. அளவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையான நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜெவாலா இதை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் ஹரியானாவின் மகள்களை அவமானப்படுத்தும் இந்த கொடூர, சிறுபிள்ளைத்தனமான, முட்டாள்தனமான விதியை "மக்களிடம் மன்னிப்பு கேட்டு திரும்பப்பெறவேண்டும். இதை ஹரியானா இளைஞர்களின் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார். மேலும், இந்த அறிவிப்புக்கு பெண்கள் அமைப்பினரும் பிற்போக்கான சிந்தனை என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: பாஜகவை வீழ்த்தும் தென்னிந்தியாவின் 'பவர்புல் லீடர்' -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மலையாள நாளிதழ் !