India

மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் 2 சிறுவர்கள் பரிதாப பலி.. எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள் !

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பலேஷ் - அஸ்வதி தம்பதி. இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கும் நிலையில், அதில் ஸ்ரீபாலு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

3 வயது சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு காரணம் மூளை தின்னும் அமீபா நோயா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செஃபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்று சொல்லப்படும் இந்த நோய் ஒரு அரியவகை நோயாகும்.

இந்த நோய் மூளையை நேரடியாக தாக்கும். அசுத்தமான தண்ணீரை பயன்படுத்தும்போது அதில் இருந்து இந்த நோய் பரவுகிறது. அதாவது அசுத்தமான தண்ணீரில் குளிப்பதோ, முகம் கழுவுவதோ, வாய் கொப்பளிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தும்போது மனிதனின் உடலுக்குள் சென்று அவரது மூளையை பாதிக்கிறது.

குறிப்பாக யாரேனும் அசுத்தமாக இருக்கும் வாய்க்கால், குளங்களில் உள்ளிட்டவற்றில் குளித்தால் இந்த நோய் அவர்கள் மூக்கு வழியாகவோ, அல்லது வாய் வழியாகவோ உடலுக்குள் புகுந்து தாக்கும். ஒரு மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த நோய் பரவாது.

இந்த நோயானது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். மூளையைக் கடுமையாக பாதிக்கும் இந்த நோயானது, தாங்கினால் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. எனவே அசுத்தமான நீரை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் வசித்து வரும் குருதத் என்ற 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் இந்த நோய் தாக்கி உயிரிழந்தார்.

இந்த நோய் கேரளாவில் முதல்முறை அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த நோய் தோற்று கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்த நோய் அறியவகை என்பதால் பல்வேறு நாடுகளிலும் இது காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் கூட அமெரிக்காவின் புளோரிடாவில் குழாய் நீரில் முகம் கழுவிய நபர் இந்த நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”தக்காளி ஏற்றி வந்த மினி லாரி கடத்தல்”.. கர்நாடக மாநிலத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்!