India

சிறுமி பாலியல் வன்கொடுமை.. "குற்றவாளியுடன் சமாதானமாக செல்லுங்கள்" -குஜராத் நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி!

குஜராத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.அப்போது அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் பிரசவம் நடக்கலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கருவைக் கலைக்கக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி சமீர் தவே அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "17 வயதில் குழந்தை பிறப்பது இயல்பான ஒன்றுதான். அப்போது எல்லாம் 14, 15 வயதிலேயே பெண்கள் குழந்தை பெற்றுவிடுவார்கள். இதுபற்றி உங்கள் வீட்டில் இருக்கும் பாட்டியிடம் கேட்டு பாருங்கள். ஒருமறை மனுஸ்மிருதியை படியுங்கள். இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என கருத்து தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.17 வயது சிறுமியின் வழக்கில் மனுஸ்மிருதியை குறிப்பிட்ட நீதிபதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அதே நீதிபதி அதே வழக்கில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, " இது 2 உயிர்கள் சம்மந்தப்பட்ட பிரச்னை என்பதால் இந்த விஷயத்தில் குற்றவாளியுடன் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்" என அறிவுறுத்திய நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது வாலிபர் நேரில் ஆஜராகி தனக்கு திருணமாகி முடிந்து மனைவி கர்ப்பமாக உள்ளதால் சமரசத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாலியல் குற்றவாளிக்கு தண்டனை வழங்காமல் குற்றவாளியுடன் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்று கூறிய நீதிபதியின் செயல் மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்த நீதிபதியை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் எழுந்துள்ளது.

Also Read: பாஜகவை விமர்சித்ததால் ஆத்திரம்.. காமெடி நடிகரை தாக்கி காலை உடைந்த பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது !