India

இந்த அவசரம் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் ஏன் இல்லை?: ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஒன்றிய அரசின் சார்பில் வன(பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 முன்மொழியப்பட்டது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது ஏற்க தக்கது இல்லை என்றும், இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் தங்களது கருத்து தெரிவிக்க முடியும். எனவே ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஒன்றி அரசின் வன திருத்தப் பாதுகாப்பு மசோதா அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, தடை உத்தரவை ரத்து செய்யக் மனு செய்ய அனுமதிக்க வேண்டும் ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞர் முறையீடு செய்தார். இதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதிகள், ஒன்றிய அரசின் பாதுகாப்பு சட்ட தடை உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய என்ன அவசரம்? என கேள்வி எழுப்பினர்.

மேலும், "உயர் நீதிமன்றம் ஒன்றிய அரசிற்கு பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில்லை. குறிப்பாக மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயம் பல வருடங்களாகச் செயல்படாமல் உள்ளது. அதற்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்ய உத்தரவிட்டும், இதுவரை நிறைவேற்றவில்லை. இப்படி பல்வேறு உத்தரவுகள் இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆனால் நீதிமன்றம் தடை விதித்ததை மட்டும் உடனடியாக விசாரணைக்கு அனுமதிக்க முறையீடு செய்கிறீர்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?. ஒன்றிய அரசும் ,நிதி அமைச்சகமும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது" என விமர்சித்துள்ளனர்.

Also Read: “செங்கோல் வளைந்துவிட்டது.. அது பழனிசாமியின் புத்தி”: மோடி, எடப்பாடி கும்பலை வெளுத்து வாங்கிய முதலமைச்சர்!