India

”பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்”.. ஒன்றிய அரசுக்கு 5 நாட்கள் கெடு வைத்த மல்யுத்த வீராங்கனைகள்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.

"ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் நாட்டுக்காக வென்ற பதக்கங்கள்தான் எங்களின் வாழ்க்கைகள், எங்களின் ஆன்மாக்கள். அவற்றை தூக்கி எறிந்து விட்டு வாழ வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எனவே அதற்குப் பிறகு India Gate-ல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து பேசினால் எங்களை கைது செய்து சிறையில் அடைகின்றனர். எங்களது புனிதமான பதக்கங்களை, புனிதமான கங்கைக்கே கொடுக்கவிருக்கிறோம். இனி அந்த பதக்கங்கள் தேவையில்லை" என வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று மாலையே மல்யுத்த வீராங்கணைகள் தங்கள் வென்ற பதக்கங்களுடன் கங்கை ஆற்றுக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அங்கேய அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வாழ்நாளில் போராடி வென்ற பதக்கங்களை தங்கை நதியில் வீசக்கூடாது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் ராகேஷ் திக்காயத் மற்றும் நரேஷ் திக்காயத் உள்ளிட்ட கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விராங்கணைகளிடம் இருந்த பதக்கங்களை விவசாயி தங்க தலைவர்கள் வாங்கிக் கொண்டனர்.

பிறகு பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டனர். மேலும் பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு வைத்துள்ளனர்.

Also Read: செயற்கையாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது பாஜக அரசு - ப.சிதம்பரம் விமர்சனம்!