India

டெல்லி, கர்நாடகா, பீகார்.. தொடரும் கொடூரம்: சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய தனியார் பள்ளி ஆசிரியர்!

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் பகுதியில் தனியார் பள்ளி சார்னு செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்களிடம் கடுமையாக நடப்பவர் என்று கூறப்படுகிறது. இவர் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.

இந்த சூழலில் அந்த மாணவர்களுக்கு வீட்டு பாடம் (Home Work) கொடுத்துள்ளார். வழக்கம்போல் குழந்தைகள் வீட்டு பாடத்தை சரியாக முடிக்காமல் வந்துள்ளனர். மறுநாள் ஆசிரியர் வீட்டு பாடம் குறித்த கேள்வி கேட்கவே, அதில் 6 வயது சிறுவன் ஒருவன் வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் சிறுவனை திட்டியுள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த கம்பை கொண்டு சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் சிறுவனை மாடிக்கு கூட்டி சென்று அங்கே வைத்தும் தாக்கியதோடு கீழே வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சிறுவனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு சிறுவனின் உறவினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சிறுவனின் மாமா

அதன்பேரில் விரைந்து வந்த உறவினர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனை கண்டு கதறி அழுதனர். தொடர்ந்து காவல்துறைக்கும் புகார் கொடுத்தனர். மேலும் சிறுவனின் மாமா, அந்த ஆசிரியர் தனது மருமகனை கடுமையாக தாக்கியதாகவும், குச்சியால் அடித்து சித்தரவதை செய்யப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்தனர்.

டெல்லி

கடந்த டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் 5-ம் வகுப்பு சிறுமியை கத்தரிக்கோலால் தாக்கி, மாடியிலிருக்கும் ஜன்னல் வழியே தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதையும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கர்நாடகா

அதேபோல் கர்நாடகாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 10 வயது சிறுவனை மாடியில் இருந்து தூக்கி போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "முதல் நாளே வளைந்துவிட்டது செங்கோல்" .. மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் கண்டனம் !