India

“உங்களுக்கு லாட்டரி விழுந்துருக்கு” :60 வயது பாட்டியிடம் வாட்சப் மூலம் ரூ.25 லட்சம் மோசடி -தொடரும் அவலம்!

புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இந்த சூழலில் ராஜேஸ்வரி வாட்சப்புக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புது எண்ணிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில் ராஜேஸ்வரிக்கு லாட்டரி மூலம் ரூ. 25 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பரிசுப் பணத்தை பெறுவதற்கு தங்களுடைய ஆதார் கார்ட் மற்றும் வங்கி தொடர்பான அனைத்து விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதேபோல் ஜிஎஸ்டி கட்டினால் இந்த பணம் உடனடியாக தங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அந்த மர்ம கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி ராஜேஸ்வரி, தன் கணவரின் பணி ஓய்வு பெற்ற பணம் மற்றும் அவர் சேமித்து வைத்திருந்த பணம், சில நகைகளை அடகு வைத்து முதலில் ரூ. 12 லட்சத்தை ஐந்து தவணைகளாக கட்டியுள்ளார்.

இருப்பினும் அவர்களிடம் இருந்து சரியான பதில் எதுவும் வரவில்லை. இதையடுத்து இரண்டு மாதத்திற்கு பின்னர் டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக செல்போஃனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், உங்களுக்கு லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி உங்களிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளனர். அவர்களை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர்களை பிடித்து கைது செய்து விசாரணை செய்து அவருடைய பணத்தை மீட்டு தருவதாகவும் கூறி ஒரு வங்கி எண்ணை கொடுத்து அதில் பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு பல தவணைகளாக ரூ.13 லட்சத்தை செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நபர்களிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. போன் செய்த போது, அந்த மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசாரிடம் ராஜேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இணையவழி மூலமாக மோசடியில் ஈடுப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போல் சைபர் கிரைம் மோசடிகளில் பலரும் ஈடுபட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: ரூ.2000 நோட்டுகளை மாற்ற கமிஷன்.. ரூ 30 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது !