India

“தெற்கில் ஏற்பட்ட விடியல்..” : கர்நாடகாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கெளரவித்த தேசிய தலைவர்கள் !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க. அரசை தோற்கடித்து, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இதில் முக்கியமாக பா.ஜ.கவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வு மூன்று நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தேர்வு செய்து அறிவித்தது. இவர்கள் பதவியேற்பு விழா நேற்று கர்நாடகாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தின் கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், இரண்டாவது முறையாக முதலமைச்சராக சித்தராமையாவும், முதல் முறையாக துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாருடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாகவும் பதவிகளை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பூபேஷ் பாகல், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அசோக் கேலாட், தேஜஸ்வி யாதவ், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, தொல் திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைமைகள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வரும்போதே டி.கே.சிவகுமார் கட்டித் தழுவி வரவேற்றார். மேலும் சித்தராமையா, ராகுல் காந்தி என அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரையும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். தொடர்ந்து அனைத்து தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்தனர்.

ஒரே மேடையில் தேசிய அளவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், அனைவரும் ஒன்று சேர்ந்து கை உயர்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களும் பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சூழலில் மேடையில் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து கை உயர்த்தும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பின் நிற்கவைத்து விட்டதாகவும், அவமதித்து விட்டதாகவும் பாஜக தவறான செய்திகளை பரப்பி வருகிறது. மேலும் காங்கிரஸ் இதனை திட்டமிட்டே செய்ததாகவும் பாஜகவை சேர்ந்த குருமூர்த்தி உள்ளிட்ட பலரும் விஷமத்தை பரப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவெனில், மேடையில் அனைத்து தலைவர்களுக்கும் நடுவே, ராகுல் காந்தி அருகே நின்றுகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியங்கா காந்தியை அருகே நிற்க கூறினார். ஆனால் அவருக்கு அங்கே சரியாக இடம் இல்லை என்பதால் தனது இடத்தை கொடுத்துவிட்டு பின்னே நின்றார். ஆனால் இதனை வேண்டுமென்றே பாஜகவினர் தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்.

ஏனெனில், நேற்று பெங்களுருவில் கூடிய கூட்டம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வித்தாக அமைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் பாஜக ஆட்சியின் முடிவு தெற்கில் இருந்து தொடங்கியுள்ளது. அதன் எதிரொலி தான் நேற்று நடைபெற்ற கூட்டம். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கர்நாடகாவில் படுதோல்வி அடைந்துள்ள பாஜக, அதனை மூடி மறைக்க ரூ.2000 நோட்டை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டம் தேசிய அளவில் பலரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாஜகவினர் விஷம தனமான அரசியலை செய்து வருகிறது. இதனால் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் ! -திருமாவளவன் MP விமர்சனம் !