India
தகுதி பட்டியலில் இல்லாத 88 RSS நபர்களுக்கு அரசு வேலை : கிராமங்களுக்குள் நஞ்சை விதைக்க பாஜக அரசு திட்டம்!
மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு, தங்களின் இந்துத்வா சித்தாந்த அரசியலை அரசு நிர்வாங்களில் திணிக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்புடைய நபர்களையே பணியமர்த்துவதை உத்தியாக கொண்டு செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்-சில் பெரும்பகுதி ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றும் அரசுப்பணியாளர்களையும் கூட ஆதிக்க சாதியினர் மற்றும் பாஜக ஆர்.எஸ்.எஸ் தொடர்பில் இருப்பவர்களே நியமித்துள்ளது.
இதுஒருபுறம் என்றால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேச பா.ஜ.க அரசு தற்போது ஒருபடி மேலேச் சென்று, தேர்ச்சி பெற்றவர்களை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்-சின் தொடர்பு அமைப்பைச் சேர்ந்தவர்களை பணியில் சேர்த்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் வகையில், உருவாக்கப்பட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வில் 88 பேர் தேர்ச்சியுற்ற நிலையில், அவர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல், 88 ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ‘Newslaundry’ செய்தித்தளம்.
மத்திய பிரதேச மாநிலம் பரஸ்வாடா கிராமத்தை சேர்ந்தவர் கௌசிக் யுகே. 30 வயதான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04ஆம் தேதி மாவட்ட மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தகுதிப் பட்டியலில் தனது பெயர் இருப்பதை அறிந்துள்ளார். 88 காலி பணியிடங்களுக்கான அந்த போட்டியில், சுமார் 10,000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து 890பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில்தான் கௌசிக் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு 8ஆம் தேதி கௌசிக் நேர்காணலுக்காக போபாலுக்குச் சென்று கொண்டிருந்த போது அவருக்கும் திடீரென தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பு CEDMAPல் இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அன்று நடைபெறவிருந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கௌசிக் நம்பவில்லை.
இதையடுத்து அவர் தொடர்ந்து ஓர் ஆண்டாக CEDMAPக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தொலைபேசியில் தொடர்புகொண்டும் நேர்காணல் குறித்த விவரங்களை கேட்டுள்ளார் . அப்போதெல்லாம் அவருக்கு நேர்காணல் விரைவில் நடைபெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, மார்ச் 2023ல், 88 பேர் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், தான் நேர்காணலுக்கே அழைக்கப்படவில்லை என்பதும் கௌசிக்கு தெரியவந்துள்ளது. புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் தகுதி பட்டியலில் கூட தான் இடம் பெறவில்லை என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
இந்த நிலையில், பணியமர்த்தப்பட்ட 88 பேரும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நியூஸ்லாண்ட்ரி என்ற தளம் கண்டறிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க, ஆட்சி நடைபெற்ற வரும் நிலையில் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களை புறக்கணித்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிகளையும் மாநில அரசு புறக்கணித்துள்ளது.
உண்மையிலேயே என்னதான் நடந்தது என்பது குறித்து ஆராயும் போது மத்தியப் பிரதேச அரசு பஞ்சாயத்து சட்டம், 1996ஐ திறம்பட செயல்படுத்துவதற்காக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்தப் பதவிகள் ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் என்ற திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ராஜ் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
அப்போது இதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் CEDMAPல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் பொதுத்துறை நிறுவனமான MPCON லிமிடெட் நிறுவனத்திற்கு outsource செய்யப்பட்டதையும் நியூஸ்லாண்ட்ரி தளம் கண்டறிந்துள்ளது. இந்தப் காலி பணியிடங்களுக்கான விளம்பரங்கள் நவம்பர் 2021 இல் வெளியிடப்பட்டன. தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.25,000 மாதம் சம்பளம் என்றும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.30,000 மாதம் சம்பளம் என்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்கள் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில், பிப்ரவரி 4-ம் தேதி வெளியான தகுதிப் பட்டியலில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்த தகுதி பட்டியலில் குறைந்தபட்சம் 12 நபர்கள் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்லாண்ட்ரி தெரிவித்துள்ளது.
ஆனால் அவர்களுக்குப் பதிலாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து ஆராயும்போது , PESA தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக 74 பேரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 14 பேரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பெயர்கள் எதுவும் தகுதி பட்டியலில் இடம் பெறவில்லை.
அவர்கள் அனைவரும் பர்வானி, திண்டோரி, அலிராஜ்பூர், தார், கர்கோன், ஷாஹ்தோல், ரத்லாம், நர்மதாபுரம், மண்டலா, அனுப்பூர், பெதுல், சிந்த்வாரா மற்றும் கந்த்வா போன்ற பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி நடைபெற்றது அப்போது முதல்வர் சவுகான் மற்றும் அவரது அதிகாரி லக்ஷ்மன் சிங் மார்க்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்கம், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பரிச்சயமான முகமாக பணியாற்றி வரும் இந்திய கடற்படை ஆயுத சேவை அதிகாரியும் ஆவார்.
அத்துடன் 88 விண்ணப்பதாரகளுள் பலரும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் சங்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை நியூஸ்லாண்ட்ரி தெரிவிக்கிறது. நியூஸ்லாண்ட்ரி MPCON-ன் துணை மேலாளரான சுனில் ஸ்ரீவஸ்தவாவை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டறிந்துள்ளது.
அப்போது, அவர் பஞ்சாயத்து இயக்குனரகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டதாகவும் தரவுகளின் அடிப்படையிலேயே காலி பணியிடங்களை நிரப்பினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் உண்மையிலேயே தகுதியான பலரும் பாதிக்கப்பட்டுள்னர்.
- சீ. ரம்யா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!