India

”உங்கள் அரசியல் வெறுப்பைத் தூண்டுகிறது”.. குஷ்புவுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் கண்டனம்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென். இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்குக் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இது வேண்டும் என்றே பொய்யான கருத்தைப் பேசுகிறது என கூறி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். குறிப்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. சங் பரிவாரின் கொள்கையைப் பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை, ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது" என்று இந்த படத்தின்ட்ரெய்லர் வெளியானபோது கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதேநேரம் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஆதரவாகப் பேசியுள்ளனர். அதேபோல் பா.ஜ.கவை சேர்ந்த குஷ்புவும், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள் எதை கண்டு பயப்படுகின்றனர். எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்களைத் தீர்மானிக்க விடுங்கள்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குஷ்புவின் கருத்திற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதில், "‘தி கேரளா ஸ்டோரி’ பொறுத்த மட்டில் எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க விடுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் அமீர்கானின் பி.கே, ஷாருக்கானின் பதான், பஜ்ராவ்மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்கு போராட்டங்கள்? உங்கள் அரசியல் வெறுப்பைத் தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்" என தெரிவித்துள்ளார்.

Also Read: சங் பரிவார் கொள்கையை பரப்பும் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் -பினராயி விஜயன் கண்டனம்!