India

Pant பாக்கெட்டுக்குள் இருந்த போன்.. திடீரென வெடித்ததில் ரயில்வே ஒப்பந்த ஊழியருக்கு நேர்ந்த கொடூரம் !

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா மாநிலம் திரிச்சூர் பகுதியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 8 வயது ஆதித்யா ஶ்ரீ சிறுமி, இரவு நேரத்தில் மொபைலில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த போன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மீண்டும் இதே போல் இளைஞர் ஒருவரது மொபைல் போன் வெடித்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையனக்கல் பகுதியை சேர்ந்தவர் பரிஸ் ரஹ்மான் (23). இந்திய இரயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் இவர், தனது மொபைல் போன தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் மொபைல் போனை வைப்பது வழக்கம்.

அந்த வகையில் சம்பவத்தன்றும், அந்த இளைஞர் மொபைல் போனை தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்துள்ளார். அப்போது முகத்தை கழுவிக்கொண்டிருந்த வேளையில், அவரது பாக்கெட்டுக்குள் இருந்த செல்போன் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இவ்வாறு வெடித்ததில், அவரது ஜீன்ஸ் பேன்ட் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் அலறிய இளைஞரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து, அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் சோதித்தபோது, அவரது தொடைப்பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மொபைல் போனில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பற்றியது தெரியவந்தது. அதோடு பரிஸ் ரஹ்மான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 'ரியல் மீ' ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார்.

வாங்கிய 2 ஆண்டுகளிலேயே மொபைல் போன் வெடித்துள்ள சம்பவத்தால் ரியல் மீ நிறுவனத்துக்கு எதிராக பரிஸ் ரஹ்மான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது. பாக்கெட்டுக்குள் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.