India

தமிழ்நாடு அமைதியான மாநிலம்- போலி வீடியோக்கள் மூலம் அமைதியை சீர்குலைப்பதா? : உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாட்டில் அண்மையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தப்பட்டது. அப்போது அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐ.ஏ.எஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற பா.ஜ.க நிர்வாகி செய்த போலி வீடியோ ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளார். தனது வருமானத்தை மேலும் கூட்டிகொள்ள தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வெளியான செய்தியை பரப்பினார்.

இதற்காக பாட்னாவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இருவரை படுகாயம் அடைந்தது போல் வேடமிட வைத்து தமிழ்நாட்டில் தாங்கள் தாக்கப்பட்டது போல் பேசி நடிக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் வெளிவந்ததும் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலிஸார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் மீது ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு பொலிஸாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மணிஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்ததனர். பின்னர் மணிஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீதான தேச பாதுகாப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி மணிஷ் காஷ்யப்உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்றும், அமைதியான மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அமைதியை சீர்குலைக்கவும் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றும் போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைப்பதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். போலி வீடியோக்களை உருவாக்கியுள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், காஷ்யப் மீதான தேச பாதுகாப்பு வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும், அவர் மீதான வழக்குகளை பீகாருக்கு மாற்றக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இதனையேற்ற நீதிபதிகள், மணிஷ் காஷ்யப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மணிஷ் காஷ்யப் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி குற்றம் சாட்டிய நிலையில், மணிஷின் முன்னாள் நண்பரான நாகேஷ் சாம்ராட் மணிஷ் காஷ்யப் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் உடன் தொடர்புடையவர்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மணிஷ் காஷ்யப் 2020 இல் பீகாரில் உள்ள சன்பாடியா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக போலியாக வீடியோ எடுத்து வதந்தி.. RSS பிரமுகரை கைது செய்த தமிழ்நாடு போலிஸ்!