India

வாடிக்கையாளர்களுக்கு தொகையை திரும்பக்கொடுக்கும் OLA, ATHER நிறுவனங்கள்.. தொடர்ந்து ஏமாற்றிவந்தது அம்பலம்!

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கூட மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதனால் பிரபலமான நிறுவனங்களும் மின்சார பைக், கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் ஓலா மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனங்கள் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளராக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை வாங்க பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஓலா மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனங்கள் தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக வாங்கிய தொகையை திரும்ப தருவதாக அறிவித்துள்ளன. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய அரசு மின் வாகனங்களுக்கு விரைவாக மாறுதல் மற்றும் உற்பத்தி செய்தல் (FAME) என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி வருகிறது.

ஆனால், மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் சார்ஜருக்கு தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஓலா மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது உறுதியானது.

இதனால் அந்த நிறுவனங்கள் ஒன்றிய அரசின் மானியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, 130 கோடி ரூபாய் பணத்தைத் திரும்பத் தருவதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்துள்ளது. ஏத்தர் எனர்ஜி தன்னுடைய 95,000 வாடிக்கையாளர்களுக்கு 140 கோடி ரூபாயை திரும்ப வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தவிர ஹீரோ மோட்டார் மற்றும் டிவிஎஸ் மோட்டார் ஆகிய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்துள்ளன.

Also Read: மீனின் பித்தப்பையை சாப்பிட்டால் சரியாகும்.. போலி மருத்துவரை நம்பிய பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !