India

மீனின் பித்தப்பையை சாப்பிட்டால் சரியாகும்.. போலி மருத்துவரை நம்பிய பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியைச் சேர்ந்த 48 வயதான சீதா தேவி என்பவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட அவர் தனது நோய் சரியாகாத நிலையில், போலி மருத்துவர் ஒருவரை சந்தித்துள்ளார்.

சீதா தேவியின் நீரழிவு நோய் குறித்த விவரம் கேட்ட அந்த போலி மருத்துவர் ரோகு மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் விரைவில் குணமாகும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் ரோகு மீனை வாங்கி அதன் பித்தப்பையைச் மருத்துவர் கூறியது போல பச்சையாக உண்டுள்ளார்.

ஆனால், அதன்பின் மூன்று நாட்களாக அவருக்கு தொடர்ந்து வாந்தி, வயிற்றுவலி என உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரின் ரத்தத்தில் சக்கரையின் அளவில் தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சீதா தேவிவை அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு முறை ஹீமோடயாலிசிஸ் செய்யப்பட்டது. மேலும் அவரின் சிறுநீரகம் வீங்கியுள்ளதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு ஆலோசனை கூறிய மருத்துவர் போலியானவர் என்பதும் உறுதியானது.

பொதுவாக தாய்லாந்து, உள்ளிட்ட தெற்கு ஆசிய பகுதியில் நீரிழிவு நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில், மீனின் பித்தப்பையைச் சாப்பிடுவது அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால் இது மூடநம்பிக்கை என்றும், மீனின் பித்தப்பையைச் சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read: நடுவானில் பயணியை கொத்திய தேள்.. அலறிய சக பயணிகள்.. ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !