India

ஆம்புலன்ஸில் ஏன் அழைத்து செல்லவில்லை?.. அத்திக் அகமது கொலை வழக்கில் யோகி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜூபால். இவர் கடந்த 2005ம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் உமேஷ் பால் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அச்சுருத்தல் உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்த போதும் அது மறுக்கப்பட்ட நிலையில், உமேஷ் பாலை மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பியாகவும் பதவி வகித்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரஃப் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக போலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது இருவரும் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்குச் செய்தியாளர்கள் வேடத்திலிருந்த மர்ம நபர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஸ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட லவ்லேஷ் திவாரி, மோஹித், அருண் மெளா்யா ஆகிய 3 கொலையாளிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 2017ம் ஆண்டு முதல் 183 என்கவுன்டர்கள் மற்றும் அத்திக் அகமது, அஸ்ரஃபும் கொலை குறித்தும் வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வுக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தர பிரதேச அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை ஏன் மருத்துவப் பரிசோதனைக்கு ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்லவில்லை? என கேள்வி எழுப்பி இந்த கொலை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

மேலும் விகாஸ் துபே என்கவுன்ட்டருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி பி.எஸ். சவுகான் கமிட்டியின் காவல்துறை செயல்பாடு குறித்த பரிந்துரைகள் மீது மாநில அரசு இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்து அமல்படுத்தியுள்ளது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: கர்நாடகா: வேட்புமனுவை வாபஸ் வாங்கினால் மேலவை உறுப்பினர் பதவி.. தோல்வி பயத்தில் பேரம் பேசிய பாஜக அமைச்சர்!