India

தரையிறங்கும் போது தீ பிடித்த ஹெலிகாப்டர்.. உயிர் தப்பிய கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் தங்களது வேட்பாளர்களைக் காங்கிரஸ் மற்றும் பா.ஜ. க உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ளனர். இதில் பா.ஜ.க கட்சியில் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 17 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதனால் பா.ஜ.கவில் இருந்து அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். மேலும் சீட் கிடைக்காதவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் முதல்வர் பசவராஜ் பொம்மை தனது சொந்த தொகுதியான ஷிகாகான் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை சென்ற ஹெலிகாப்டர் தீ விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ஹெலிகாப்டர் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வந்துள்ளார்.

பின்னர் இவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி தனது கான்வாயில் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே திடீரென அவர் வந்த ஹெலிகாப்படரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனே தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர். பின்னர் அதே ஹெலிகாப்டரில் முதல்வர் பசவராஜ் பொம்மை அங்கிருந்து சென்றுள்ளார். சற்று தாமதமாகச் சென்று இருந்தாலும் முதல்வர் பசவராஜ் பொம்மை தீ விபத்தில் சிக்கி இருக்கக் கூடும். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கணவன் உயிரை காப்பாற்ற.. முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்: நடந்தது என்ன?