India

முடிவுக்கு வந்த ஆப்ரேஷன் தாமரை.. கர்நாடகாவில் கட்சித் தாவும் பாஜக MLAக்கள் - அதிகரிக்கும் காங்கிரஸ் பலம்!

கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணா இரு தினங்களுக்கு முன்பு தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 'மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 123 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுவிட்டது. ஜே.டி.எஸ் கட்சி 93 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால் கர்நாடகாவில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணா திடீரென தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார். கடந்த 31ம் தேதி கர்நாடகா மாநில சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்த கோபாலகிருஷ்ணா இன்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1997, 1999, 2004, 2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோபாலகிருஷ்ணா. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புத்தராத காரணத்தால் பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏ.வானார்.

தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார். கர்நாடகாவில் கடந்த மாதத்தில் மட்டும் பா.ஜ.கவின் இரண்டு மேலவை உறுப்பினர்கள், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சிக்கு தாவி உள்ளார்.

Also Read: பீகார் : ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை.. பாஜக தலைவரின் கடையை கொள்ளையடித்து சென்ற இந்துத்துவ கும்பல் !