India

“இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. காரில் வைத்து மர்ம கும்பல் செய்த கொடூரம்” : பின்னணி என்ன ?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கோரமங்களா என்ற பகுதி. இங்கு வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவர் கடந்த 25-ம் தேதி இரவு நேரத்தில் தனது ஆண் நண்பருடன் நேஷனல் ஹோம்ஸ் பார்க்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அங்கே ஆள் நடமாட்டம் பெரிதாக காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அங்கே காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பெண்ணிடமும் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அதனையே ஆண் நண்பர் தடுக்க முயன்றுள்ளார்.

இதில் கோபமடைந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு அந்த பெண்ணை, அவரது கண்முன்னே காரில் தூக்கிப்போட்டு சென்றுள்ளனர். இரவு நேரம் முழுவதும் காரிலே அந்த பெண்ணை 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு அந்த காரை எங்கும் நிறுத்தாமல் சுற்றிக்கொண்டே இருந்துள்ளனர்.

இப்படி இரவு முழுவதும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், காலை ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். உடல் முழுவதும் இரத்த கோரங்களுடன் கிடந்த அந்த பெண்ணை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து போலிஸாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்ததை கூறினார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதில் இருந்த கார் எண்ணை வைத்து அந்த 4 பேரை கைது செய்தனர்.

விசாரிக்கையில், அந்த 4 பேரில் இரண்டு பேர் தனியார் அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். ஒருவர் கால் சென்டரில், இன்னொருவர் எலக்ட்ரீசியன் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அனைவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் நண்பரை தாக்கி விட்டு 19 வயது இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களின் செயல் பெங்களுருவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வழுக்கை தலையை ‘விக்’ வைத்து திருமணம்.. கேள்வி கேட்ட புது மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. நடந்தது என்ன ?