India
“Internet முடக்கம்.. தேடுதல் வேட்டை.. பஞ்சாப்பைப் பிரிக்க ‘காலிஸ்தான்’ சதி” : யார் இந்த அம்ரித்பால்?
பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. காலிஸ்தான் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் பல அமைப்புகளுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட ‘வாரிஸ் பஞ்சாப் டி’ (Waris Punjab De) என்ற அமைப்பு காலிஸ்தான் கோரிக்கையை லேசான அளவில் மறைமுகமாக வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தீப் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பை அம்ரித்பால் சிங் என்பவர் கைப்பற்றி பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு கோஷத்தை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் லவ் பிரீத் சிங் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையால் எரிச்சல் அடைந்த வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பு, கைது செய்யப்பட்டவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தது.
முதலில் இத்தகைய மிரட்டலை பஞ்சாப் போலிஸார் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருநாள் இடைவெளியில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் துப்பாக்கி, வாள் என பயங்கர ஆயுதங்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அம்ரித்பால் சிங்கின் உதவியாளரை விடுவிப்பதாக காவல் துறையினர் அறிவித்தனர்.
இச்சம்பவம் பஞ்சாப் காவல்துறை வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளியாக அமைந்துவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை ஆலோசித்த பின்னர் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், அம்ரித்பால் சிங்கை கைது செய்ய 7 மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அம்ரித் பால் சிங்கை கைது செய்யும் பொழுது வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க துணை ராணுவப்படையினரும் களமிறக்கப்பட்டனர். மேலும் சனிக்கிழமை மதியம் முதல் மாநிலம் முழுவதும் எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட இணைய சேவை துண்டிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவுமுதல் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நோக்கில் தீவிர தேடுதல் வேட்டையில் பஞ்சாப் போலீசார் களமிறங்கினர். முதல் கட்டமாக “வாரிஸ் பஞ்சாப் டி” அமைப்பின் செயற்பாட்டாளர்கள் 78-க்கும் மேற்பட்டவர்களை பஞ்சாப் போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். ஞாயிறன்று அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் நெருங்கிய போது அவர் பைக்கில் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுவிட்டார். அவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அம்ரித்பால் சிங்கை தேடுதல் பணி தொடர்ந்து நடை பெற்று வரும் நிலையில், திங்களன்று மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அம்ரித்பால் சிங்கின் கார் ஓட்டுநர் மற்றும் அவரது மாமா போலிஸில் சரண் அடைந்தனர். முன்னதாக, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அமிர்தசரஸில் உள்ள அம்ரித்பால் சிங்கின் கிராமமான ஜல்லுபூர் கைராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனிடையே இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் முன் குவிந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூதரகத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி இங்கிலாந்து வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக்கொடியை இறக்கிய நிலையில், அங்கு சென்ற போலிஸார் காலிஸ்தான் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், லண்டன் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி மீண்டும் பறக்கவிடப்பட்டது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !