India

“ஞாபகம் வருதே..” 35 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் Reunion.. காணாமல் போன காதல் ஜோடி.. கேரளாவில் பரபரப்பு !

பொதுவாக நாம் படித்த பள்ளி , கல்லூரிகளில் பல மலரும் நினைவுகள் உள்ளது. பெரும்பாலோனருக்கு நட்பு, காதல் என முதலில் வருவதே பள்ளியில்தான். பள்ளி நட்பு இறுதி வரை வரவில்லை என்றாலும், நமது நினைவுகளில் மறக்க முடியாத ஒன்றாக அமைகிறது.

இதனாலே பள்ளி, கல்லூரி முடித்த பிறகு சில மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவர். பள்ளிக்கூடம் பட பாணியில் என்று சொன்ன காலம் போய் 96 பட பாணியில் என்றே சொல்லலாம். இதுபோன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் மாணவர்கள் தங்களது பள்ளி பருவ நட்புகள், சோகங்கள், சிரிப்புகள் போன்றவற்றை நினைவு கூறுவர்.

அந்த வகையில் தற்போது கேரளாவில் ஒரு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் நட்புகளை பரிமாறிக்கொண்டனர். இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்ளுக்கு தற்போது சுமார் 50 வயதாவது இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து ரீ-யூனியனை நன்றாக கொண்டாடினர்.

அதில் இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு முன்னாள் மாணவரும், இடுக்கியை சேர்ந்த முன்னாள் மாணவியும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், படிப்பு முடிந்த பின் இருவரும் தங்கள் காதலை முறித்துக்கொண்டு குடும்பத்தார் விருப்பப்படி தனித்தனியே வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் இந்த ரீயூனியன் போது இருவரும் சந்தித்துக்கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு இந்த இருவர் மட்டும் திடீரென காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து இருவரது குடும்பத்தாரும், இவர்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பவில்லை என்பதால் பதறிபோனர். இதனால் இவர்கள் இருவரையும் தேடினர். இருப்பினும் இவர்கள் கிடைக்கவில்லை.

இதனால் இதுபற்றி எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், காணாமல் போன முன்னாள் காதலர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: புதிய செருப்பில் அசிங்கம் செய்ததால் நாய் கொலை: படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை கைது செய்த போலிஸ்!