India

தெலுங்கானா: "அம்மா மன்னியுங்கள், என்னால் இந்த சித்திரவதையை தாங்கமுடியவில்லை"-கடிதம் எழுதி மாணவர் தற்கொலை!

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள நார்சிங்கி என்ற இடத்தில் ஜூனியர் கல்லூரி ஒன்று அமைந்துள்ளார். இங்கு 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஹாஸ்டலில் தங்கி படித்துவந்துள்ளார். இந்த கல்லூரியில், மாணவனுக்கு தினந்தோறும் ஐஐடி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் நேரடியாக தூங்க வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், சரியாக படிக்காத மாணவர்களை அனைவரின் முன் கல்லூரி நிர்வாகம் அவமானப்படுத்தியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கம் போல இரவு 10 மணிக்கு படிப்பு முடிந்ததும் மாணவர்கள் விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அதில் ஒரு மாணவர் அறைக்கு வராமல் இருந்ததை சக மாணவர்கள் விடுதி வார்டனிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் மாணவரை தேடியதில் வகுப்பறை ஒன்றில் மாணவர் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்துள்ளது. பின்னர் இதுதொடர்பாக மாணவரின் பெற்றோருக்கும், போலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போலிஸார் நடத்திய சோதனையில் மாணவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அதில், "அம்மா,என்னால் இதனை சமாளிக்க முடியவில்லை . அதனால்தான் இந்த தவறான முடிவை நான் எடுக்கிறேன். ப்ளீஸ் என்னை மன்னித்துவிடுங்கள். நான் அனுபவித்த சித்திரவதைகளை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது. அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்" என்று எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Also Read: "தேசிய அளவில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுதியான குரலாக மாறியுள்ளது" -INDIAN EXPRESS புகழாரம் !