India
வெங்காயம் அறுவடைக்கு செலவோ ரூ.40 ஆயிரம்.. கிடைத்ததோ வெறும் 2 ரூபாய் காசு : ஒரு விவசாயியின் கண்ணீர் கதை!
மஹாராஷ்டிராவில் ஒரு விவசாயியின் 512 கிலோ வெங்காயத்தை, கிலோவுக்கு ரூ.1 என ஏலம் எடுத்துள்ளனர்.அதிலும், சந்தைக்கு ஏற்றிவந்த வண்டிக்கூலி கழிக்கப்பட்டு இறுதியாக மொத்த வெங்காயத்திற்கான விலையாக ரூ.2 என 'செக்' கொடுத்ததால் விவசாயி வேதனையடைந்துள்ளார்.
இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா. இம்மாநிலத்தில் தற்போது வெங்காய சாகுபடி அதிகமாக இருக்கிறது. வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அங்கு அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் பெரும்பாலும் சோலாப்பூர் வேளாண் உற்பத்தி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப்படும். பெரும்பாலான வணிகர்கள் விவசாயிகளின் விளை நிலத்திற்கே சென்று விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுவார்கள்.
அந்தவகையில் சோலாப்பூர் மாவட்டத்தின் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயமும் அங்கிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டது.
அந்த ஏலத்தில் சவானின் வெங்காயம் தரம் குறைந்து இருப்பதாக கூறி கிலோ ரூ.1க்கு ஏலம் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி சவான், 512 கிலோவுக்கு ரூ.512 என கிடைத்தவரை போதும் என்ற எண்ணத்தில் அந்த பணத்தை பெற நினைத்தார். ஆனால், வெங்காயம் ஏற்றி வந்ததற்கான வண்டி கூலி ரூ.509.51 கழிக்கப்பட்டு மீதம் 2 ரூபாய் 49 காசுகள் இருப்பதாக பில்லை கொடுத்ததால் பேரதிர்ச்சிக்கு உள்ளானார் சவான். அந்த பணத்தையும் 'செக்'காக மட்டுமே கொடுத்துள்ளனர்.
அதிலும் என்ன 'டுவிஸ்ட்' என்றால் அந்த ரூ.2யும் உடனடியாக எடுக்க முடியாதாம். 15 நாட்களுக்கு பிறகே வங்கி மூலமாக பெற முடியும் என்றும் தேதியிட்டு கொடுத்துள்ளனர். அடிமேல் அடி விழுந்த விவசாயி சவான் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்.
இது குறித்து சவான் கூறுகையில், 'கடந்த 3, 4 ஆண்டுகளாக விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று சந்தைக்கு கொண்டு வந்துள்ள 512 கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்' என வேதனையுடன் கூறினார்.
சந்தையில் இந்த வெங்காயத்தை ஏலம் எடுத்த வணிகர், 'இந்த வெங்காயம் தரமற்றதாக இருப்பதால் இவ்வளவு குறைந்த விலையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து வெங்காயம் அறுவடை செய்த விவசாயிக்கு ரூ.2 செக் கொடுத்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!