India

தடையை மீறி மீன் பிடித்ததால் வலை பறிமுதல்.. பழிவாங்க 3 படகுகளுக்குத் தீவைத்த பா.ஜ.க நிர்வாகி கைது!

புதுச்சேரி அருகே உள்ள ஊசுட்டேரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரு மாநில அரசுகளுக்கு சொந்தமான பகுதியாகும். மேலும் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இங்கு பறவைகளை வேட்டையாடவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குப் புதுச்சேரிக்குச் சொந்தமான பகுதியில் சுற்றுலாத்துறை பராமரித்து, சுற்றுலாப் பயணிகளுக்குப் படகு சவாரி நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஊசுட்டேரி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மூன்று படகுகளை மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் மூன்று படகுகளும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இச்சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் படகுகளை எரித்தது புதுச்சேரியை ஒட்டியுள்ள வாழபட்டாம்பாளையம் பகுதியைச் சார்ந்த குணசேகர், ரகு மற்றும் காளி ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. இதில் குணசேகர் விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி செயலாளராக உள்ளார்.

இதனையடுத்து ஏரிக்கரையில் தலைமறைவாக இருந்த குணசேகர் மற்றும் ரகு ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் ஊசுட்டேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, குணசேகர் தடையை மீறி ஊசுட்டேரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததால், அவருடைய வலையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு, புதுச்சேரி சுற்றுலாத்துறை படகுகள் கொடுத்துள்ளனர். இதனால் வனத்துறை அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கத்தில் மூன்று படகுகளுக்கு குணசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் தீவைத்து எரித்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் காலப்பட்டு மத்தியச் சிறையில் போலிஸார் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காளியைத் தேடி வருகின்றனர்.

Also Read: அதானியை நம்பி முதலீட்டு தொகையை இழந்த LIC ! ஒரே மாதத்தில் 46 ஆயிரம் கோடி இழப்பு !