India

“வெளியான அந்தரங்க புகைப்படங்கள்..” - சமூக வலைதளங்களில் நடக்கும் பெண் IPS-IAS அதிகாரிகளின் சண்டை -பின்னணி?

கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரி ரூபா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி ஆகியோருக்கு இடையே நடக்கும் மோதல் போக்கு தற்போது அதிகரித்தவண்ணமாக காணப்படுகிறது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் டி ரூபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த சமயத்தில் சிறைத்துறை டிஐஜியாக டி ரூபா பதவி வகித்தார்.

D Roopa

அப்போது சிறையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சம்பவம் கர்நாடகா, தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ரூபா. தற்போது ரூபா கர்நாடகா கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

அதே போல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ரோகினி சிந்தூரியும் அங்கு பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது கர்நாடகா மாநில இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்போது மோதல் போக்கு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் தனிப்பட்ட விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் தொடங்கிய இவர்களது இந்த சண்டை தற்போது நாட்டின் தலைப்பு செய்தியாகவே வந்துள்ளது. அப்படி இவர்களுக்குள் என்னதான் சண்டை?. அதாவது கடந்த 2021ல் ரோகினி சிந்தூரி மைசூர் கலெக்டராக இருந்தபொது, ரோகினி சிந்தூரிக்கும், மைசூர் கிருஷ்ணராஜ நகரை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) எம்எல்ஏ சாரா மகேஷ் என்பவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது வந்தது. மேலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் உள்ளிட்ட சில குற்றசாட்டுகளை முன்வைத்தனர். இப்படி இவர்களுக்குள் பிரச்னை இருந்தது அம்மாநிலத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றாக காணப்பட்டது. மேலும் இது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒரு உணவகத்தில் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் இருக்கும் போட்டோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, ‛‛ஒரு அதிகாரி அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார். சமரசம் செய்கிறார்களா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த இரு அதிகாரிகளுக்கும் இடையேயான பிரச்னைக்கு இதுதான் முதல் காரணம்.

தொடர்ந்து ரோகினி மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த ரூபா, அவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியும் எழுப்பினார். இப்படி ரோகினி செய்த ஊழல், பல அதிகாரிகளுடன் அவருக்கு இருந்த மோதல்கள் என பலவற்றை குறிப்பிட்டு தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். இவரது இந்த பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எல்லாவற்றிற்கும் மேலாக ரோகினியின் சில தனிப்பட்ட புகைப்படங்களையும், அதில் சில ஆபாசமாக இருந்த புகைப்படங்களையும் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றினார் ரூபா. அதோடு "இந்த படங்களை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது ரோகினி சிந்தூரி ஷேர் செய்துள்ளார். இது ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகள் படி குற்றத்துக்குரியது. இதுபற்றி எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ரூபாவின் இந்த செயலுக்கு கோபமடைந்த ரோகினி சிந்தூரி இதுகுறித்து பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன. அதுதான் அவரது செயல்பாடாகவே உள்ளது.

இதற்கு முன்பு அவர் பணியாற்றிய இடங்களிலும் அவதூறு பரப்பும் செயலை அவர் செய்துள்ளார். எனது வாட்ஸ்அப்களில் ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரோபைல் வைத்த படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர் அவதூறு பரப்புகிறார். ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு பெண் ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகளுக்குள் வெட்ட வெளியில் நடைபெறும் அதுவும், அந்தரங்க புகைப்படத்தை பகிர்ந்து ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு கர்நாடக மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மார்ச்1 - திராவிட நாயகனின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும்” : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!