India

“இது ஒரு நிறுவன படுகொலை..” சூடு பிடிக்கும் IIT முதலாமாண்டு மாணவரின் மர்ம மரணம்.. மும்பையில் அதிர்வலை !

பொதுவாக பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் பல இன்னல்களை தாண்டி வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று கனவோடு பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் மூலம் படிக்க வருவர். அவ்வாறு படிக்கும் மாணவர்களை அங்கிருக்கும் சில சக மாணவர்கள், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொல்லை கொடுப்பர்.

மேலும் அவர்களை சாதிய ரீதியாக துன்புறுத்தவும் செய்வர். இதுபோன்ற நிகழ்வு பல பகுதிகளில் நடைபெற்றாலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐஐடி-யில் அதிகமாகவே காணப்படும். இந்தியாவில் ஐஐடி நிறுவனங்கள், மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி, அகமதாபாத் என 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் கனவோடு பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருவர். நெடுந்தூரத்தில் இருந்து கல்வி கற்க வரும் மாணவ - மாணவியருக்கு அங்கேயே விடுதி வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மும்பையிலும் இதுபோல் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கே படிக்கும் மாணவர்கள் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல் நடப்பதாக அடிக்கடி குற்றசாட்டுகள் வரும். மேலும் ஆசிரியர் செய்யும் இதுபோன்ற செயல்களால், பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் மனம் நொந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர். அதோடு சில மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து போகின்றனர். அந்த வகையில் தற்போது முதலாமாண்டு படிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தர்ஷன் சொலான்கி என்ற 18 வயது மாணவர் ஒருவர் மும்பை ஐஐடி-யில் பி.டெக் முதலாமாண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவர், கடந்த 12 ஆம் தேதி திடீரென்று ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவர் இறப்பு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக மாணவருடன் விடுதியில் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த மாணவரின் மரணம் தற்கொலை அல்ல என்றும், அது ஒரு நிறுவன படுகொலை என்றும் மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC என்று சொல்லப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Darshan Solanki, student

முன்னதாக மாணவரின் தற்கொலை குறித்து மும்பை ஐஐடி இயக்குநர் சுபாஷிஷ் செளத்ரி, "18 வயதேயான முதலாமாண்டு மாணவனின் இழப்பை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மாணவனின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு வலிமை கிடைக்க வேண்டிக்கொள்கிறோம். மாணவரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்தும் பேசிய APPSC உறுப்பினர் பிரணவ் ஜீவன், "சாதி ரீதியான பிரச்னைகளை உணர்ந்த தலித் ஆலோகர் வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஐஐடி காலம் காலமாக மாணவர்களுக்கு ஆதரவு தரவில்லை. ஆலோசகர்களே இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளனர்.

ஐஐடி இயக்குநரின் இரங்கல் கடிதத்தில் கூட மாணவர் பெயர் விபரங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற பிறகே இறந்த சொலான்கியின் விபரத்துடன் அடுத்த மெயிலை ஐஐடி அனுப்பியது. தலித் சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஐஐடியில் குறைவாக உள்ளார்கள். இதனால் SC/ST பிரிவை அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

நாங்கள் இந்த கோரிக்கையை 2014 முதல் விடுத்தோம்; ஆனால் 2022 ஆம் ஆண்டுதான் அது செயல்பட தொடங்கியது. நாங்கள் தயாரித்த ஆவணங்களை ஐஐடி நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. சொலான்கியின் மரணம் என்பது ஐஐடியில் விளிம்புநிலை சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் படும் துயரங்களை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக அந்த சமுதாயத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கஷ்டங்களை காட்டி உள்ளது.

முதலாம் ஆண்டு படிப்பில் சேரும் மாணவர்கள் ஜாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள்.ஜாதிய துன்புறுத்தல்களின் காரணமாக அவர்களின் நிலை மேலும் மோசமடைகிறது." என்றார். மும்பை ஐஐடியில் இதேபோல் நிறுவன படுகொலைகள் ஏராளமாக அரங்கேறியுள்ளது.

Also Read: "சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலர்ந்துவிடாது".. மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!