India

தூக்கில் தொங்கிய விடுதி மாணவன்: சடலத்தை கண்ட வார்டனுக்கு நேர்ந்த சோகம்.. ஆந்திர தனியார் கல்லூரியில் பகீர்

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ளது நாராயாணா பொறியியல் கல்லூரி. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். மேலும் இந்த கல்லூரியில் உள்ள விடுதியிலும் பல்வேறு மாணவர்கள் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

அந்த வகையில் கடப்பா பகுதி புலிவெந்துலா என்ற கிராமத்தை சேர்ந்த தரனேஸ்வரர் ரெட்டி என்ற மாணவனும் இந்த கல்லூரியில் படித்து வருகிறார். பி.எஸ்சி கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், கல்லூரியின் விடுதியில் தங்கியுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த மாணவன் நேற்று திடீரென்று கல்லூரி விடுதியிலுள்ள தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவன் தூக்கில் தொங்கியிருப்பதை கண்ட சக மாணவர்கள் உடனே கல்லூரி விடுதியின் வார்டனிடம் கூறியுள்ளனர். தகவல் அறிந்து பதறி ஓடி வந்த வார்டன் சீனிவாசலு (57) என்பவர், மாணவன் தூக்கில் தொங்கியிருப்பதை கண்டுள்ளார்.

இதனை கண்ட வார்டன், சம்பவ இடத்திலேயே மயமடைந்துள்ளார். மயக்கம் போட்டு விழுந்த அவரை சக மாணவர்கள் தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர்; ஆனால் அப்போதும் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரை மீட்டு அருகில் இருந்த கூடூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், காவல் துறை, மாணவரின் பெற்றோர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். அதோடு மாணவரின் அறையில் தற்கொலைக்கான எந்தவொரு கடிதமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதுகுறித்த வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவரின் பெற்றோர், அவரது மரணத்திற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியிலுள்ள பென்ச், சுவர் என அனைத்தயும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவரின் பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கலைந்து சென்றனர். இருப்பினும் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட வார்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: துருக்கி நிலநடுக்கத்தில் 4000 பேர் பலி.. இயற்கை பேரழிவை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்.. வைரலாகும் பதிவு !