India

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டும் 58,000 காலி பணியிடங்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல் !

ஒன்றிய பா.ஜ.க அரசு அமைந்ததும் ஹிந்தி,சமஸ்கிருத திணிப்பில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்காக புதிய கல்விக்கொள்கையை கொண்டுவந்து நாடு முழுவதும் ஹிந்தி,சமஸ்கிருதம் கற்பிக்க முயற்சி எடுத்துவருவதாக கூறியுள்ளது.

மேலும், யாருமே பேசாத சமஸ்கிருதத்துக்கு பல ஆயிரம் கோடிகளை கொடுத்து அழிந்து போன மொழியை வளர்க்க முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் பதில் அளித்தார். அப்போது, கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மற்றும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 58 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், கேந்திரிய வித்யாலயாவில் மட்டும் 12 ஆயிரத்து 99 ஆசிரியர் இடங்களும், ஆயிரத்து 312 ஆசிரியர் அல்லாத இடங்களும் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, மத்திய பல்கலைக்கழகங்களில், 6 ஆயிரத்து 180 ஆசிரியர் இடங்களும், 15 ஆயிரத்து 798 ஆசிரியர் அல்லாத இடங்களும் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தவிர ஐ.ஐ.டி.களில் 4 ஆயிரத்து 423 ஆசிரியர் காலியிடங்களும், 5 ஆயிரத்து 52 ஆசிரியர் அல்லாத காலியிடங்களும் உள்ளதாகவும் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கூறியுள்ளார். மேலும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஆயிரத்து 50 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலியிடங்கள் உள்ளதாகவும் இந்த காலியிடங்களை நிரப்ப அந்தந்த கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் ஒன்றிய அரசு மாணவர்களின் கல்விக்கு போதிய அளவில் செலவு செய்யவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.