India

“பாட்டியை கடித்த செல்ல நாய்..” - 13 ஆண்டுகளுக்கு பிறகு சிறை சென்ற உரிமையாளர்.. மும்பையில் அதிர்வலை !

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் கெர்சி இரானி (72). இவருக்கும் தொழிலதிபரும் பக்கத்து வீட்டு உறவினருமான சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜி (44) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் நேபியன் கடல் சாலையில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் வாய் பேச்சால் வசைபாடி கொண்டனர். அப்போது ஹோர்முஸ்ஜியின் Rottweiler என்று சொல்லப்படும் வளர்ப்பு நாய் அவரது காரில் இருந்துள்ளது. இருவரும் சண்டையிட்டதை பார்த்த அந்த நாய் மிகவும் ஆக்ரோஷமாக குரைத்துள்ளது. மேலும் அது வெளியில் வர முனைப்பு காட்டியுள்ளது.

இதனை கண்ட மூதாட்டி, உடனே அவரிடம் காரின் கதவை திறக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் நாயின் உரிமையாளரோ காரின் கதவை திறந்துள்ளார். இதனால் ஆக்ரோஷமாக இருந்த நாய், அந்த மூதாட்டியை தாக்கியுள்ளது. கால்களை இரண்டு முறையும், வலது கையும் கடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது வந்ததையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்ட ஹோர்முஸ்ஜிக்கு தனது நாயின் குணம் நன்றாக தெரியும். எனவே அவர் அதை வெளியே அழைத்து செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர் போன்று வயது முதிர்ந்தோர் இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வது கடினம். எனவே உரிமையாளர்தான் இதற்கு பொறுப்பு.

Rottweiler நாய்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை 328 PSI (சதுர அங்குலத்திற்கு பவுண்டு) வரை கடியை உருவாக்கும் திறன் கொண்டவை. அவை நாய்களின் வலிமையான இனங்களில் ஒன்றாகும். எனவே இந்த வகை நாய்களை பொது இடங்களில் கூட்டி செல்லும்போது உரிமையாளர் மிகவும் கவனமாக இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்து.

எனினும் சம்பவத்தன்று குற்றம்சாட்டப்பட்டவர், எல்லாம் தெரிந்தும் நாய் இருந்த காரின் கதவை திறந்துள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்." என்று கூறி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூதாட்டியை நாய் கடித்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாயின் உரிமையாளருக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போன்று பிட்புல் என வகை நாய்கள், மக்களை கடித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தில் பிட்புல் நாய் ஒன்று தன்னை வளர்த்த உரிமையாளரின் தாயை கடித்து கொன்றுள்ளது. அதேபோல், சாலையில் நின்றிருந்த மாட்டின் தாடையை இழுத்து கடித்துள்ளது.

அதோடு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் காதையும் கடித்து துப்பியுள்ளது. இதுபோன்று தொடர் நாய் கடி சம்பவங்கள் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் உ.பி-யில் பிட்புல் வகை நாய் வளர்த்தால் அபராதம் என்று மாநகராட்சி நிர்வாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து டெல்லியிலும் வளர்ப்பு நாய் யாரை கடித்தாலும், அதற்கு முழு பொறுப்பு அதன் உரிமையாளர்தான் என்றும், பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகள் அனைத்தும் உரிமையாளர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வைர நெக்லஸ்.. இரவோடு இரவாக திருடி சென்ற எலி.. IPS அதிகாரி வெளியிட்ட VIDEO !