India
“இதுதான் நீட் லட்சணமா? - 1311 மருத்துவ இடங்களை வீணடித்த மோடி அரசு” : பட்டியலை வெளியிட்டு திமுக MP அதிரடி!
“நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 1311 முதுநிலை இடங்கள் காலியாக உள்ளன. இது நீட் கலந்தாய்வு முறையின் மோசமான தன்மையையும், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளையும் அம்பலப்படுத்துகிறது.” என தி.மு.க எம்.பி வில்சன் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தி.மு.க எம்.பி வில்சன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், “இந்த கடிதத்தின் வாயிலாக தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால், 2022-23 ம் கல்வியாண்டில் 1311 முதுகலை மருத்துவ இடங்கள், காலியிடங்களுக்கான சிறப்பு சுற்று ( special stray round ) முடிந்த பின்னரும் (MD/ MS/ DNB) காலியாக விடபப்ட்டுள்ளது பற்றிய பல்வேறு புகார்கள் என் பார்வைக்கு வந்துள்ளன. அதன் விவரங்களை கீழே இணைத்துள்ளேன்.
மாநில வாரியாக காலியாக உள்ள இடங்கள்
2. இந்த புகார்களின்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வியக்கத்தக்க வகையில் 1311 முதுநிலை இடங்கள் காலியாக உள்ளன. இது நீட் கலந்தாய்வு முறையின் மோசமான தன்மையையும், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளையும் மற்றும் மருத்துவ இடங்களை கையாள்வதில் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் மெத்தனமாக நடந்து கொள்ளும் விதத்தையும் அம்பலப்படுத்துகிறது.
ஒவ்வொரு முதுகலை மருத்துவ இடமும் நாட்டின் தேசிய சொத்தாகும். எனவே, சிறப்பு இடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள கலந்தாய்வு முறையின் குளறுபடிகளால் இவை வீணடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் இடஒதுக்கீட்டில் கணக்கிடப்படுவதால் பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவர்களுக்கு கலந்தாய்வு நடைமுறையில் நியாயமான முறையில் நடத்தப்படுவதில்லை. இது தொடர்பாக நான் உங்களுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், இந்த காலியிடங்களுக்கான தேதிகளை அவசர அவசரமாக அறிவித்து, அவசரம் காட்டப்பட்டதால், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஒவ்வொரு கலந்தாய்வின் பொழுதும், கவுன்சிலிங் / காலிப்பணியிடங்கள் போன்றவற்றின் கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் நிறைய குழப்பங்களும் தாமதங்களும் ஏற்படுவதாலும், மாணவர்கள் சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆளாவதாலும் DGHS முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.
மெத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும், திறமையின்றியும் செயல்படும் சம்பந்தப்பட்ட DGHS அதிகாரிகளுக்கு இந்த அமைப்பில் இடமில்லை. அதுமட்டுமின்றி இந்த குழப்பத்திற்கு அவர்கள் மீது துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
3. Dar-us-salaam கல்வி அறக்கட்டளை மற்றும் பலர் VS இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பலர் இடையிலான வழக்கு wp (c) 267 இன் 2017- ன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வழக்கமான கவுன்சிலிங்கிற்குப் பிறகும் மீதமுள்ள காலியிடங்கள், சிறப்பு காலியிடங்களுக்கான தனி கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மத்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான சிறப்பு காலியிடங்களின் கலந்தாய்வு சுற்றுகள் 14.1.2023 வரை நீட்டிக்கப்படுவதாக 2.1.2023 அன்று அறிவிக்கப்பட்டது, மாநில ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த குழப்பமானது நூற்றுக்கணக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் வீணாவதற்கு வழிவகுத்தது.
மேலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 10.1.2023 வெளியிடப்பட்டு 14.1.2023 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக உரிய கால அவகாசம் வழங்கப்படாத காரணத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. எனவே 2022-23 ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1311 முதுகலை இடங்கள் அந்தந்த மாநிலங்களின் கலந்தாய்வுக் குழுக்களால் நிரப்பப்படவில்லை.
4. நமது நாட்டில் நன்கு தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள், இது அதிகரித்து வரும் நமது மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது அல்ல.. எனவே, இதை நிவர்த்தி செய்ய மருத்துவர்களுக்கு கல்வியளித்தல் மற்றும் பயிற்சியளித்தல் ஆகியவற்றில் நமது மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் அவற்றின் சிறப்பு தேசிய நலனுக்கானது என்பதால் அவர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்க தேவையான தளத்தை வழங்க வேண்டும்.
5. மாண்பமை உச்ச் நீதிமன்றமானது, முதுகலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று தெளிவாக கூறியுள்ளது. முதுநிலைப் படிப்பில் தகுதியான மாணவர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசத்திற்குள் DGHS மற்றும் கலந்தாய்வு குழுக்கள் செயல்படத் தவறியதால், கடினமாகப் படித்த, கணிசமான அளவு பணம் மற்றும் நேரத்தை செலவழித்த மாணவர்களை ஆபத்தில் தள்ளுகிறது.
6. எனவே, இந்த விஷயத்தில் தயவுகூர்ந்து தலையிட்டு, 2022-23 கல்வியாண்டில் விடுபட்டுள்ள இந்த 1311 காலி இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கவும், இந்த முதுநிலை மருத்துவ இடங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் கூடுதல் சாளரம் வழங்கிட டி.ஜி.எச்.எஸ்-க்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!