India
“சங்-பரிவார் அமைப்புகளின் தீவிரவாத நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய DGP மாநாடு”: அறிக்கையை நீக்கிய மோடி அரசு!
தீவிரமான தேசியவாதம், இந்துத்துவா அமைப்புகளின் வெறுப்புப் பேச்சுக்கள், பாபர் மசூதி இடிப்பு, மாட்டிறைச்சி வன்முறை, கர்வாப்சி அரசியல் போன்றவை இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊட்டி வளர்ப்பதாக, அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், பல்வேறு மாநில டி.ஜி.பி-க்கள் அறிக்கை முன் வைத்திருந்தனர்.
இஸ்லாமிய மற்றும் இந்து அமைப்புக்களின் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான டி.ஜி.பி-க்களின் அந்த அறிக்கைகள், விவாதங்கள் இணையதளத்திலும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், டி.ஜி.பி-க்களின் அறிக்கைகள், இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமன்றி, சங்-பரிவார் அமைப்புகளின் இந்துத்துவா தீவிரவாத நடவடிக்கைகள் பற்றியும் அம்பலப்படுத்துவதால், அவற்றை இணையத்திலிருந்து நரேந்திர மோடி அரசு நீக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாடு (Conference of Director Generals and Inspector Generals of Police) டெல்லியில் நடைபெறும். இந்தாண்டும் ஜனவரி 20 முதல் 22 வரை டெல்லியில் காவல்துறைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்து, விவாதித்துள்ளனர். அப்போதுதான், இஸ்லாம் மற்றும் இந்துத்துவா ஆகிய இருபிரிவு அமைப்புகளுமே நாட்டில் தீவிர வாதத்தை ஒன்றுக்கொன்று ஊட்டி வளர்ப்பதை அதிகாரிகள் கவலையோடு தெரிவித்துள்ளனர்.
வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்புகள் என்ற வகைப்படுத்தியும் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். பாபர் மசூதி இடிப்பு, இந்து தேசியவாதத்தின் வளர்ச்சி, மாட்டிறைச்சி படுகொலை வழக்குகள் மற்றும் “கர்வாப்சி இயக்கம்” ஆகியவை இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் கொண்டு செல்கின்றன என்றும் ஒரு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (PFI) போன்ற அமைப்புகளின் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் சித்தாந்தங்களை எதிர்கொள்வதற்கு, மேற்கண்ட வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் செயல் பாடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும்; அவற்றின் மீது நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அரசியலில் சிறுபான்மையினருக்கு அதிக பிரதிநிதித்துவம், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்றவையும் இஸ்லாமியத் தீவிர வாதத்தை எதிர்கொள்வதில் முக்கியமான பங்காற்றும் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர், தீவிர வாதத்தை இடதுசாரி, வலதுசாரி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற அடிப்படையில் வகைப் படுத்தியுள்ளார்.
மேலும் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளால் தீவிரவாதம் அடிக்கடி தூண்டப்படுகிறது. பாலஸ்தீனியர்களின் அவலநிலை, ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீடு, இராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஊடுருவல்; பாகிஸ்தானில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள்; டேனிஷ் கார்ட்டூன் சர்ச்சை; சுதந்திரத்திற்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் விடுதலை; வகுப்புவாத கலவரங்கள்; பாபர் மசூதி இடிப்பு, 2002 கோத்ரா கலவரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை தீவிரவாத தூண்டுதலின் பின்னணியில் உள்ளன.
இந்நிலையில், மதச்சார்பற்ற, தேசபக்தி மிக்க மற்றும் அறிவார்ந்த முஸ்லிம் இளைஞர்களை தீர்வுக்கான பணிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலைகளில் இஸ்லாமியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இதுபோன்ற அனைத்து ஆவணங்களுமே கடந்த செவ்வாய்க் கிழமை வரை மாநாட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு, இந்துத்துவா நடவடிக்கைகள் காரணம் என்பதையும், இந்துத்துவா தீவிரவாதம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதத்தின் பின்னால் அணிதிரள் வதைத்தடுப்பதற்கு தனித் திட்டங்கள், சிறப்புக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கைகள் வலியுறுத்துவதால், இந்த அறிக்கைகளை நரேந்திர மோடி அரசு தற்போது நீக்கியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!