India

தமிழ் மொழியில் வெளியாகும் 52 தீர்ப்புகள்.. நாளை 1091 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வெளியீடு!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வந்தன. அதேபோல் மாநில மொழிகளிலேயே வழக்காடவும் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்படும் வழங்கப்படும் என அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆங்கிலத்தில் உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை 99% மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களைப் புரிந்து கொள்வது அவசியம். அதன் ஒருபகுதியாகத்தான் மாநில மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடுவதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பில், "மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவதை வரவேற்கிறோம். மேலும் உயர்நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் இருக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை 1091 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படுகிறது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை தமிழ்மொழியில் 52 தீர்புகள் வெளியாகிறது. அதேபோல் மலையாளத்தில் 3, தெலுங்கு 3, கன்னடம் 1, மராத்தி 4 தீர்ப்புகள் வெளியாகிறது. இப்படி 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படுகிறது. இதில் தமிழ்மொழியில் தான் 52 தீர்ப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடியின் கொடூரம்.. ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2-வது பாகத்தை வெளியிட்டது BBC!