India
1947ம் ஆண்டுக்கு முன் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்ட ஜனவரி 26: குடியரசு தினமாக மாறிய காரணமும்,பின்னணியும்!
இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியா தனது 73வது குடியரசுத் தினத்தை கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இந்திய குடியரசு தலைவர் ஏற்றுவார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தேசியக் கொடியேற்றும் நிகழ்வு கொண்டாடப்படும் குடியரசு தின நாளில், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமங்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது நமது தலையாய கடமையாகும்.
குடியரசு தினமான முன்னாள் சுதந்திர தினம் :
1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் இந்தியா இறையாண்மை கொண்ட குடியரசாக அறிவிக்கப்பட்டு, அந்த நாள் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தியா சுதந்திரம் பெரும் முன்னரே ஜனவரி 26 முக்கிய நாளாக சுதந்திர போராட்ட வீரர்களால் கொண்டாடப்பட்டது நம்மில் பலருக்கு தெரியாத உண்மையாகும்.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இங்குள்ள மன்னர்களுக்கு இடையே இருந்த பிரச்னைகளை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைநிறுத்தி கொண்டது. பின்னர் சிறிது சிறிதாக நிலபகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கிய கிழக்கிந்திய கம்பெனி ஒரு கட்டத்தில் இந்தியாவின் முக்கிய அரசுகளை போரிலோ, அல்லது சூழ்ச்சியை பயன்படுத்தி வீழ்த்தி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்து கொண்டது.
ஆனால், பல்வேறு கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்தியர்கள் கிளர்ந்தெழுந்தனர். அதில் வேலூர் சிப்பாய் கழகம் முக்கிய இடம் பெற்றது. மேலும், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான முதல் பெரும் கிளர்ச்சியாகவும் இது அமைந்தது. அதன்பின்னர் 1857-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்தனர். இது முதல் இந்திய சுதந்திர போர் என அறியப்படுகிறது.
இதன் காரணமாக அதுவரை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்தியா பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டு கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால் போன்ற தலைவர்கள் உருவாகி காங்கிரஸ் கட்சி சுதந்திர போராட்டத்தின் அடையாளமாக மாறியது. தொடர்ந்து காந்தியின் தலைமைக்கு கீழ் வந்த காங்கிரஸ் நேரு, காமராஜர் போன்ற தலைவர்களின் உதவியோடு வெகுஜன மக்களை ஒருங்கிணைத்த பெரும் இயக்கமாக உருவாகியது.
இந்த மக்களின் போராட்டங்களுக்கு ஒரு கட்டத்தில் பிரிட்டன் பணிந்து இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து (சுயாட்சி) வழங்க முன்வந்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி 1930ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயாட்சிதான் வேண்டும் (சுதந்திரம் ) என அறிவித்து முதன்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியது. அதோடு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுதந்திரம் அடையும் வரை ஜனவரி 26-ம் தேதியே சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது. தொடர் போராட்டங்களின் விளைவாக பிரிட்டன் அரசும் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஒப்புக்கொண்டது. அந்த பொறுப்பு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டனுக்கு ஒதுக்கப்பட்டது.
மவுண்ட் பேட்டனும் இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15,1947-ம் ஆண்டு அன்று சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி அதே நாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதுமுதற்கொண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் முதன் முதலாக பூரண சுயாட்சி கோரிக்கை வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்ட ஜனவரி 26ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாட இந்திய அரசு முடிவு செய்து 1950ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியா இறையாண்மை பெற்ற குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!