India
“நா அத பாத்தேன்.. ஆனா யார்கிட்டையும் சொல்லல..” - டெல்லியை உலுக்கிய பெண் கொலை வழக்கில் தோழி அதிர்ச்சி !
உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் மக்கள் சிலர் குடி, கூத்து என தங்கள் கொண்டாட்டங்களை சிறப்பாக செய்தனர்.
இப்படி இருக்கையில், நேற்று (01.01.2023) அதிகாலை சுமார் 3 மணி அளவில் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சாம்பல் நிற பலேனோ கார் ஒன்று இளம்பெண்ணை இழுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற அவர்கள் கஞ்சவாலா என்ற பகுதியில் இளம்பெண்ணின் சடலத்தை நிர்வாண கோலத்தில் மீட்டெடுத்தனர்.
பின்னர் அந்த உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதியிலுள்ள காவல்துறைக்கும் அளித்த தகவலின் பேரில், அந்த காரை கண்டுபிடித்தனர். அதில் இருந்த 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் முழு போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், தனது ஸ்கூட்டியில் வந்துள்ளார்.
அப்போது இளைஞர்கள் வந்த காரும், அந்த பைக்கும் மோதியதில் அந்த இளம்பெண்ணின் உடை காரில் சிக்கியிருந்துள்ளது. இதனை கவனிக்காத இளைஞர்கள் காரை ஓட்டி சென்றுள்ளனர். சுல்தான்பூரில் இருந்து ஏறத்தாழ 12-14 கி.மீ வரை காரில் தரதரவென இழுத்து வரப்பட்டுள்ளார். இதில் அவரது உடை முழுவதுமாக கிழிந்து, சம்பவ இடத்திலேயே நிர்வாண கோலத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன பெண்ணின் பெயர் அஞ்சலி எனவும், அவரது வயது 20 எனவும் கண்டறியப்பட்டது.
புத்தாண்டின்போது நிகழ்ந்த இந்த கோர சம்பவத்திற்கு நாடு முழுவதுமிருந்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான சுமார் 400 சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அஞ்சலி பைக்கில் இருந்து கிளம்பியது முதல் அவர் விபத்தில் சிக்கி இழுத்துவரப்பட்ட அனைத்து காட்சிகளும் தெரியவந்தது.
மேலும் அவர் விபத்தில் சிக்கும்போது, அவருடன் அவர் தோழி நிதி என்பவரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் பேசுகையில், "விபத்து நடப்பதற்கு முன்பு அஞ்சலி குடித்திருந்தாள். இருப்பினும் அவள் இருசக்கர வாகனம் ஓட்டினார். பின்னர் நாங்கள் போய்க்கொண்டிருக்கையில் ஒரு கார் எங்கள் ஸ்கூட்டி மீது மோதியது.
அப்போது அஞ்சலி அதில் சிக்கியிருந்தார். நான் இதை கண்டதும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டேன். மேலும் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. ஏனென்றால் நான் பயந்துவிட்டேன். அதோடு என் தோழி காரில் சிக்கியிருந்தது கார் ஓட்டி சென்றவர்களுக்கு நன்கு தெரியும்" என்று கூறினார்.
இவரது இந்த பேச்சு நாடு முழுவதும் இணையவாசிகளிடம் இருந்து கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஒரு தோழி விபத்தில் சிக்கியிருக்கும் அதனை தடுக்க அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, மேலும் போலீசுக்கும் தகவல் கொடுக்கவில்லை என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
முன்னதாக விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பாத்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டனர். அதோடு கைது செய்யப்பட்ட அனைவரும் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு இந்த சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "கஞ்சவாலா சம்பவம் குறித்து ஆளுநர் பேசினேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் மீது ஐபிசியின் கடுமையான பிரிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அவர்கள் உயர் அரசியல் தொடர்புகளை கொண்டிருந்தாலும் மெத்தனம் காட்டக்கூடாது. கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தும், அரசு எப்போதும் அந்த குடும்பத்துடன் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது டெல்லியில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் 14 கி.மீ வரை தரதரவென இழுத்து சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!