India

உ.பி : சுரங்கம் தோண்டி 1.8 கிலோ தங்கம் கொள்ளை.. SBI வங்கி கிளையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் !

இந்தியாவிலுள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றுதான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI). இந்த வங்கியின் கிளைகள் நாடு முழுவதும் இருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்திலும் இயங்கி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள பஹ்தி என்ற பகுதியில் வங்கி இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல், இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வங்கிக்கு சென்றனர். அப்போது வங்கி உள்ளே ஓட்டை போட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பதறியடித்த ஊழியர்கள் லாக்கருக்கு சென்று பார்த்தபோது, அங்கே நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சினிமா பாணியில் கொள்ளையடிக்கப் பட்டது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பஹ்தி பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் இன்று காலை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 1.8 கிலோ தங்கம் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 29 வங்கியின் வாடிக்கையாளர்களுடையது என்று வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் வங்கியின் பின்புறத்தில் உள்ள காலி நிலத்தில் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி வங்கிக்குள் நுழைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதற்காக கேஸ் கட்டரை பயன்படுத்தியுள்ளனர். அதோடு பணத்தையும் கொள்ளையடிக்க முயன்றபோது அது முடியாததால், நகைகளை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது நிச்சயம் முன்பே பிளான் செய்துதான் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். ஒருவேளை இது வங்கியில் உள்ள நபர்களின் கைவரிசியாக கூட இருக்கலாம். தற்போது சில கைரேகைகளை எடுத்து அதனை ஆராய்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளோம். குற்றவாளிகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.

இதேபோன்றொரு சம்பவம் கடந்த 1997-ம் ஆண்டு கான்பூரில் உள்ள கோவிந்த் நகர் SBI வங்கி கிளையில் சுமார் 60 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையைத் தோண்டி திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காருக்குள் அமர்ந்து சிலிண்டரில் உள்ள வாயுவை சுவாசித்த இன்ஜினியர்.. இறுதியில் நடந்த சோகம் ! -பின்னணி என்ன