India

“போலிஸ் தான் என்னை மிரட்டி சொல்ல வச்சாங்க..” - ஜூஸ் கொடுத்து காதலன் கொலை வழக்கில் காதலி அந்தர் பல்டி !

தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள பாறசாலையில் கிரீஷ்மா என்ற இளம்பெண் ஒருவர் தனது காதலன் ஷாரோன் என்பவரை இரகசிய திருமணம் செய்து ஏமாற்றி கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இறந்துபோன காதலன் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் காதலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கிரீஷ்மாவின் பெற்றோர்கள் அவருக்கு ஜாதகம் பார்த்தபோது, 'பெண்ணின் முதல் கணவன் உயிரிழந்து விடுவார். இரண்டாவது கணவருடன் மட்டும் தான் அவரால் வாழ முடியும்' என ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து தனது காதலனை அதற்கு பலிகடாவாக்க குடும்பத்துடன் சேர்ந்து கிரீஷ்மா திட்டமிட்டு காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்பு கூறிய ஜாதகம் விஷயம் அனைத்தும் பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும் தனக்கு பார்த்த மாப்பிள்ளை மிகவும் பணக்காரர் என்றும், அவரை கிரீஷ்மா திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் காவல்துறையிடம் சிக்காமல் எப்படி கொலை செய்வது என்று கூகுளில் தேடி பார்த்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனிடையே காதலனை எவ்வாறு கொலை செய்தது என்றும், அவர் சம்பவ இடத்திற்கு சென்று நடித்து காட்டினார். அதோடு கஷாயம் கொடுப்பதற்கு முன்பாக ஜூஸில் காய்ச்சல் மாத்திரையை அதிக அளவில் கலந்தும் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில், கிரீஷ்மாவின் வாக்குமூலம் நெய்யாற்றின்கரை மாஜிஸ்ட்ரேட் கோர்ட் 2-ல் பதிவுசெய்யப்பட்டது. அப்போது அவர் தான் தனது காதலன் ஷாரோனை கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தான் தன்னை மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்ததாகவும் கூறினார்.

மேலும் இந்த வாழ்க்கை போலீசார் விரைவில் முடிக்க பழியை தன் மீது போடுவதாகவும், அதற்காக போலியான ஆதாரங்களையும் திரட்டியுள்ளதாகவும், தான் ஷாரோனை கொலை செய்யவில்லை என்றும் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை அதிகாரிகள் தரப்பில், "இந்த வழக்கில் எங்களிடம் சரியான ஆதரங்கள் உள்ளது. எல்லா குற்றவாளிகளும் கோர்ட்டில் இது போல் சொல்வது வழக்கமான ஒன்று தான். கிரீஷ்மா அளித்த வாக்குமூலம் அனைத்தும் எங்களிடம் வீடியோவாகவும் உள்ளது. இன்னும் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளோம். அதோடு கிரீஷ்மாவை மீண்டும் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளோம்" கூறப்பட்டுள்ளது.

Also Read: “அம்புட்டும் பொய்..” -ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்: உண்மையால் அதிர்ச்சி