India

ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் ஒன்றிய அரசு தொடர்ந்து ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன.

ஆளுநர்களின் முக்கிய வேலையே மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ரப்பர் ஸ்டாம்ப் வேலைதான். ஆனால் சில ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரம் தங்களுக்கும் இருப்பதாக நினைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனாலும் ஆளுநர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி போன்ற முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்துவருகிறார். இது போன்ற காரணங்கள் உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்களும் நேரிட்டுள்ளது. இதன் காரணமாக ஆளுநரை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நாளிதழான ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் மாநில ஆளுநர்களுக்கு அந்தந்த மாநிலங்கள் செலவு செய்யும் தொகை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநில வாரியாக ஆளுநரின் தனிப்பட்ட செலவுகளும், ஆளுநர் மாளிகையின் செலவுகளும் குறித்த விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆளுநர் மாளிகைக்காக மட்டும் தமிழ்நாடு அதிகபட்சமாக 6.6 கோடி செலவுசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை மிகப்பெரிய பரப்பளவு கொண்டது என்பதால் அதற்க்கான தோட்டங்கள், தண்ணீர், மின்சாரம், சேதாரங்கள் ஆகியவற்றுக்கு மாநில அரசு செலவுசெய்து வருகிறது.

இது குறித்த தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதனை பதிவிட்டு இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு அடுத்தடுத்த நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது,

Also Read: இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?