India

ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் பெண்.. 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வந்தபோது மலர்ந்த காதலால் நெகிழ்ச்சி !

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் கெமில். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தோடு இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது கர்நாடகாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனந்தராஜ் என்பவர் இவர்களுக்கு வழிகாட்டியாக அறிமுகமானார்.

அப்போது இவர் கர்நாடகா முழுவதும் சுற்றி காட்டியுள்ளார். இது கெமிலின் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு புரியும்படி எளிதாக கூறி, சுற்றிக்காட்டியுள்ளார் அனந்தராஜ். மேலும் அவரிடம் உள்ள பழக்கங்கள் பிடித்து போகவே, கெமிலும், அனந்தராஜூம் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர்.

இதையடுத்து தனது தாயகத்துக்கு திரும்பிய கெமில், அனந்தராஜிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு நல்ல நட்பு இருந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து போனிலே பேசி தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

இவர்கள் காதல் சுமார் 4 ஆண்டுகளை கடந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி இருவரும் அவர்களது வீட்டில் பேச, பின்னர் குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிச்சயம் நடந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று (நவம்பர் 25) இவர்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷபா கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி இந்தியாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து இந்தியாவில் வந்து திருமணம் செய்துகொண்டுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரது காதல் திருமணத்துக்கும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 5வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தண்டனையாக 5 'தோப்புக்கரணம்': பீகார் பஞ்சாயத்து தீர்ப்பால் சர்ச்சை |VIDEO