India

5வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தண்டனையாக 5 'தோப்புக்கரணம்': பீகார் பஞ்சாயத்து தீர்ப்பால் சர்ச்சை |VIDEO

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞருக்கு 5 தோப்புக்கரணம் போடச்சொல்லி பஞ்சாயத்து அளித்துள்ள தீர்ப்பு பீகாரில் அரங்கேறியுள்ளது.

நாளுக்கு நாள் உலகெங்கிலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்தியாவில், அதிலும் வட மாநிலங்களில் தினந்தோறும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் குறைந்தபாடே இல்லை.

இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் இந்தியாவில் முதலில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம். அதே போல், பாஜக கூட்டணி அமைத்திருக்கும் பீகார் மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் சுமார் 786 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

இந்த குற்றவாளிகளுக்கு சட்டத்தின் படி தண்டனை வழங்கப்பட்டு வரும் சமயத்தில் பீகார் மாநிலத்தில் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 தோப்புக்கரணம் போட்டால் மட்டும் போதும் என கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா பகுதியில் கிராமம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இங்கு வசிக்கும் 5 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அருண் பண்டிட் என்ற இளைஞர் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அவரை ஒரு கோழிப்பண்ணைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனது உடலில் வலி இருப்பதாக கூறி அழுதுள்ளார். பின்னர் சிறுமியிடம் இது குறித்து பெற்றோர் கேட்கையில், தனக்கு நேர்ந்ததை அழுதுகொண்டே சிறுமி தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தை நாடினர். அவர்களும் பஞ்சாயத்தை கூட்டி விசாரித்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூறுவதை கண்டுகொள்ளாமல், இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் பெற்றோரின் ஆறுதலுக்காக வேண்டுமானால் குற்றம்புரிந்த இளைஞரை தோப்புக்கரணம் போட சொல்லலாம் என கூறி, 5 தோப்புக்கரணத்தை தண்டனையாக விதித்துள்ளனர்.

இதையடுத்து குற்றம் புரிந்த இளைஞரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையான 5 தோப்புக்கரணத்தை போட்டுவிட்டு அமைதியாக அமர்ந்துள்ளார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து பலரும் இதற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரை டேக் செய்து சமூக வலைதளங்களில் கேள்விகளையும் எழுப்பினர்.

பின்னரே இந்த சம்பவம் குறித்து FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றமிழைத்தவர்கள் மீதும், குற்றத்தை மூடி மறைக்க முயன்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெங்களூரு: முந்தி செல்வதில் போட்டி.. காதில் இருந்து இரத்தம் வழிய பைக் ஓட்டுநரை தாக்கிய பேருந்து ஓட்டுநர்!