India
தந்தையை தாக்கிய போலிஸ்.. மகன் கொடுத்த பதிலடியால் பெருமிதம் கொண்ட பெற்றோர்.. பீகாரில் நெகிழ்ச்சி !
தனது தந்தையை காவல் அதிகாரி ஒருவர் அடித்ததால், கஷ்ட பட்டு படித்த மகன் நீதித்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சா பகுதியை அடுத்துள்ளது சத்தூர். இங்கு வசித்து வருபவர் சந்திரசேகர் யாதவ். இவர் தனது மகன் கமலேஷ் மற்றும் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். ஆனால் குடும்பம் மிகவும் வறுமைகாரணமாக இவர்கள் அனைவரும் டெல்லிக்கு இடம்பெயர்ந்தனர்.
அங்கு ஒரு சேரியில் தங்கியிருந்தனர். ஆனால் அப்போது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், அவர்கள் வசிக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து சேரி குடிசைகளையும் அகற்றியது. இதனால் திக்கு தடுமாறி போன கமலேஷின் தந்தை, குடும்பத்துடன் டிரான்ஸ் யமுனாவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசிக்கத் தொடங்கினர்.
அங்கு இவர்களுக்கு பிழைப்பு நடத்த வேண்டும் என்று சாலையோரம் கடை ஒன்றை அமைத்து தொழில் செய்து வந்தனர். அந்த சமயத்தில் கமலேஷ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார். சாலையோர கடை என்றாலும் வியாபாரம் சிறிது நன்றாகவே நடத்தப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் ஒரு நாள் அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் வந்துள்ளார்.
மேலும் அந்த கடைகளை அகற்றுமாறு கூறியுள்ளார். இதற்கு கமலேஷ் தந்தை மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரப்பட்ட அதிகாரி, அவரை சரமாரியாக அடித்துள்ளார். இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கமலேஷ், தனது தந்தையிடம் "காவல்துறையினர் எதற்கும் பயப்பட மாட்டார்களா? அவர்கள் யாருக்கு தான் பயப்படுவார்கள்?" என்று கேட்க, அதற்கு தந்தையோ, "நீதிபதிக்கு" என்று பதில் கூறியுள்ளார்.
இதை அப்போதே ஆழமாக தனது மனதில் வைத்துக்கொண்டு படிக்க தொடங்கிய கமலேஷ், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று டெல்லி சட்டக்கல்லூரியில் படிக்க தொடங்கினார். ஆனால் காமலேஷிற்கு வக்கீலாக வேண்டும் என்ற எண்ணமில்லை, மாறாக நீதிபதியாக வேண்டும் என்பதே அவரது இலக்கு. எனவே அதை நோக்கி நகர்ந்தார்.
கடினமாக படித்தார். 2017-ம் ஆண்டு அவரது முதல் தேர்வில் தோல்வியை தழுவினார். இருப்பினும் விடாமல் முயன்று வந்தார். இடையே, கொரோனா உள்ளிட்ட சில பேரிடர் காலமும் வந்தது. தனது விடா முயற்சி காரணமாக இந்தாண்டு பீகார் மாநில நீதித்துறை தேர்வை எழுதி, 64-வது ரேங்க் பெற்று தேர்ச்சியடைந்தார்.
தற்போது கமலேஷின் வெற்றியை அவரது குடும்பம் மட்டுமின்றி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், சோக காலத்தில் உறுதுணையாக இருந்த உறவினர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த மகிழ்ச்சி சம்பவம் குறித்து கமலேஷ் கூறுகையில், "பீகாரில் பிறந்த நான், எனது தந்தை வறுமையின் காரணமாக டெல்லியில் வாழ்ந்தேன். எனது குழந்தைப் பருவத்தை டெல்லியின் சேரிகளில் கழித்தேன்.
நான் பள்ளி படிக்கும் போது எங்களது குடிசை வீடும் சேதமடைந்தது. அதன்பிறகு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எனது தந்தையை காவல் அதிகாரி ஒருவர் தாக்கினார். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அதனால்தான் நான் நீதிபதி ஆக முயற்சி செய்து தற்போது நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருந்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும்" என்றார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!