India

”பா.ஜ.கவை எதிர்ப்பதால் என்னுடன் பேச சக நடிகர்கள் அச்சப்படுகிறார்கள்” : நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை!

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது

அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அப்படி கடந்த காலங்களில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொடூரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினர். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பா.ஜ.க அரசை விமர்சித்து வருகிறார். அதன் வன்முறை முகத்தை தனது ஒவ்வொரு ட்விட்டர் பதிவிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக சுயேச்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களைத் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க வை நான் எதிர்ப்பதால் என்னுடன் சக நடிகர்கள் பேசுவதற்குப் பயப்படுகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய பிரகாஷ் ராஜ், அரசியலில் நான் ஒரு நெருப்பு பிராண்டாக இருப்பதால் பல நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை.

எனது அரசியல் நடவடிக்கைகளால் எனது பணி பாதிக்கப்படுகிறது. அதற்காக அரசியலைத் தூக்கி வீசிவிட முடியாது. வேண்டுமென்றால் எனது பணியை விட்டு ஒதுங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு வசதியும் வலிமையும் எனக்கு இருக்கிறது.

பல நடிகர்கள் முன்பு போல் என்னிடம் பேசுவதில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஒரு பிரச்சனைக்கு எதிராகப் பேசுவது அந்த கலைஞர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்களைக் குறை கூறவில்லை. இப்போது நான் இன்னும் சுதந்திரமாக உணர்கிறேன். ஏனென்றால் நான் என் குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால், என் படங்களின் காரணமாக நான் ஒரு நல்ல நடிகனாக மட்டுமே அறியப்பட்டிருப்பேன்.

ஆனால் நான் இல்லாமல் போகும்போது நல்ல மனிதனாகவும் பிரகாஷ் ராஜ் இருந்தான் என சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி அவருக்கு ஆதரவாக இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: திடீர் திருப்பம்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஜோ பைடன்.. நடந்தது என்ன?