India
மயக்கமருத்து கொடுக்காமல் பெண்களுக்கு அறுவை சிகிச்சை.. பீகார் மருத்துவரின் விளக்கத்தால் அதிர்ச்சி !
24 பெண்களுக்கு மயக்கமருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது.
பீகார் மாநிலம் ககாரியா என்ற பகுதியில் பார்பட்டா, அலுவாலி என்ற இரண்டு அரசு ஆரம்ப பொது சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் அமைப்பான Global Development என்ற தன்னார்வ அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டது.
எனவே அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பொதுவாக கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும்போது பெண்களுக்கு முறையாக அனஸ்தீசியா என்று சொல்லப்படும் மயக்க மருந்து கொடுத்த பிறகே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அங்கு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமலே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் பெண்கள் தங்கள் சிகிச்சையின் போது அலறித்துடித்துள்ளனர்.
பெண்களின் அலறல் சத்தத்தை கேட்ட சக பெண்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறி இது குறித்து வெளியில் கூறினர். இதையடுத்தே இந்த விவகாரம் வெளியில் தெரிந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இதை தொடர்ந்து இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "அறுவை சிகிச்சை செய்யும் போது எனது கை, கால்களை நான்கு பேர் இறுக்கமாக பிடித்துக் கொண்டனர். நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சையை செய்து முடித்தார். ஆபரேஷன் முடிந்த பிறகு போடப்பட்ட ஊசிக்கு பிறகே மரத்துப்போனது போல உணர்ந்தேன்" என்று தனது வலியோடு கூறினார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பெண்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ககாரியா மாவட்ட மாஜிஸ்திரேட் அலோக் ரஞ்சன் கோஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அடிப்படையாக கொண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் சம்மந்தபட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த கொடூர குற்றசாட்டை தொடர்ந்து, அலுவாலி சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரியான மருத்துவர் மணிஷ் குமார், "கருத்தடை சிகிச்சைக்கான பணிகளில் ஈடுபட்ட Global Development என்ற தன்னார்வ அமைப்பை கருப்புப் பட்டியலில் (Black List) வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மற்றொரு சுகாதார மையமான பார்பட்டா சுகாதார நிலையத்தின் பொறுப்பாளரும் மருத்துவருமான ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், "கருத்தடை செய்யப்பட்ட பெண்களுக்கு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக வேலை செய்யாமல் போயிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டும், வெவ்வேறு உடலமைப்பாக இருந்ததால் பயன் கொடுக்காமல் போயிருக்கிறது" என்று விளக்கம் அளித்தார்.
மருத்துவரின் இந்த விளக்கம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பீகார் மருத்துவர்களின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் (NCW) வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!